சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை ஏழு போட்டிகளில் ஆடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதில் நான்கு வெற்றிகள், மூன்று தோல்விகள் பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.
லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகளே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் பார்த்தால் சிஎஸ்கே அணி இப்போது நான்காவது இடத்தில் தான் இருக்கிறது என திருப்தி அடைய முடியாது. அதற்கு காரணம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தான்.

இந்த இரண்டு அணிகளும் கூட நான்கு வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்றுள்ளன. லக்னோ அணி ஏழு போட்டிகளில் நான்கு வெற்றிகளும், குஜராத் அணி எட்டு போட்டிகளில் நான்கு வெற்றிகளும் பெற்றுள்ளன. இந்த இரண்டு அணிகளில் லக்னோ அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மீதமுள்ளன. குஜராத் அணிக்கு ஆறு போட்டிகள் மீதமுள்ளன.
கடந்த கால புள்ளிப் பட்டியல் கணக்குகளின் படி ஒரு ஐபிஎல் அணி லீக் சுற்றில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று, அதிக நெட் ரன் ரேட்டும் வைத்திருந்தால் அந்த அணிக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விடும். அதன் படி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் தங்களின் அடுத்த ஏழு போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற வேண்டும். குஜராத் அணி அடுத்த ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற வேண்டும்.
இந்த மூன்று அணிகளுமே சமநிலை கொண்ட அணியுடன் ஆடி வருவதால் லீக் சுற்றின் முடிவில் எட்டு வெற்றிகளை பெறும் திறன் கொண்ட அணிகளாக உள்ளன. தற்போது முதல் மூன்று இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (8 போட்டிகள் - 7 வெற்றிகள்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (7 போட்டிகள் - 5 வெற்றிகள்), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (7 போட்டிகள் - 5 வெற்றிகள்) ஆகிய அணிகள் உள்ளன.
அந்த மூன்று அணிகளுமே சரியான முறையில் திட்டமிட்டு ஆடி போட்டிகளில் வெற்றிகளை குவித்து வந்துள்ள நிலையில், அடுத்து வரும் போட்டிகளில் மூன்று அல்லது நான்கு வெற்றிகளை எளிதாக பெறும் நிலையில் உள்ளன. எனவே, அந்த மூன்று அணிகளுக்கும் பிளே-ஆஃப் உறுதி என எடுத்துக் கொண்டால் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு சென்னை, லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் கடும் போட்டி போட நேரிடும்.
புள்ளிப் பட்டியலில் ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் இருக்கும் மும்பை மற்றும் டெல்லி அணிகள் ஏதாவது வித்தைகளை காட்டி அந்த அணிகளுக்கு மீதமுள்ள ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகளை பெற்று, அதிக நெட் ரன் ரேட் பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் செல்ல முடியும். அந்த அணிகளில் பல குளறுபடிகள் இருப்பதால் அந்த அணிகளின் பிளே-ஆஃப் வாய்ப்பு முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் (8 போட்டிகள் - 2 வெற்றிகள்) மற்றும் பெங்களூரு அணிகள் (8 போட்டிகள் - 1 வெற்றி) பெற்று கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.