ஹர்திக் பாண்டியாவின் ஏமாற்று வேலை? குண்டைத் தூக்கிப் போட்ட முன்னாள் வீரர்.. உண்மை என்ன?
மும்பை : இந்திய அணியின் முன்னணி ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியா குறித்து முன்னாள் வீரர் பிரவீன் குமார் சில அதிரடி கருத்துக்களை கூறி இருக்கிறார். ஒவ்வொரு ஐபிஎல் தொடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பும் காயத்தில் சிக்கி விடுகிறார்.. அது எப்படி? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டராக முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறார். அவருக்கு மாற்றாக வேறு எந்த வீரரும் இல்லை என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா எப்போது காயத்தில் சிக்கினாலும் அவர் அதில் இருந்து மீண்டு வந்த உடன் இந்திய அணியில் சேர்த்து கொள்ளப்படுவார்.

இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் ஹர்திக் பாண்டியா பல முறை ஐபிஎல் தொடருக்கு சில மாதங்கள் முன்னதாக காயத்தில் சிக்கி இந்திய அணி ஆடும் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து இருக்கிறார். அதே சமயம், ஐபிஎல் தொடருக்கு அவரது காயம் குணமாகி விடும். அப்போது ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பார். இது போல பல ஆண்டுகள் நடந்து விட்டது.
2024 ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா கடந்த நான்கு மாதங்களாக இந்திய அணிக்காக விளையாடவில்லை. 2023 உலகக்கோப்பை தொடரின் இடையே வருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டு வர நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்ட அவர் தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட உள்ளார்.
அது குறித்து பேசிய பிரவீன் குமார், "நீங்கள் ஐபிஎல் தொடருக்கு இரண்டு மாதம் முன்பு காயத்தில் சிக்குவீர்கள். நாட்டுக்காக ஆட மாட்டீர்கள். உங்கள் மாநிலத்துக்காக உள்ளூர் போட்டிகளில் ஆட மாட்டீர்கள். ஐபிஎல் தொடரில் மட்டும் நேரடியாக ஆடுவீர்கள். இது போல ஒரு விஷயம் நடக்கக் கூடாது. ஒருவர் பணம் சம்பாதிக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால், நீங்கள் உங்கள் மாநிலத்துக்காக, நாட்டுக்காக ஆட வேண்டும். ஆனால், இப்போது சிலர் ஐபிஎல்-க்கு மட்டும் முக்கியத்துவம் தருகிறார்கள்." எனக் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications