சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட கேகேஆர் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரண்டு மாதம் இருந்தாக அமைந்த இந்த தொடர் தற்போது நிறைவு பெற்றிருக்கிறது. இந்த நிலையில் எந்த வீரர்கள் என்ன விருதுகளை வாங்கி இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இதைப் போன்று இறுதிப்போட்டி வரை வந்த சன்ரைசர்ஸ் அணிக்கு 13 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான ஆரஞ்சு கோப்பை தொப்பி வழங்கப்பட்டது. இதில் விராட் கோலி 741 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது.
இது குறித்து பேசிய விராட் கோலி தமக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டதை மிகவும் பெருமையாக நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சீசன் தமக்கு ஒரு ரோலர் கோஸ்டர் போல் இருப்பதாகவும் தெரிவித்தார். இதுபோன்று அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலருக்கு வழங்கப்படும் பர்பிள் தொப்பியை பஞ்சாப் அணியின் ஹர்சல் பட்டேல் கைப்பற்றினார்.
ஹர்சல் பட்டேல், இந்த தொடரில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. அதேபோன்று வளர்ந்து வரும் வீரருக்கான விருதை சன்ரைசர்ஸ் அணியின் நிதிஷ்குமார் ரெட்டி கைப்பற்றினார். இவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த தொடரில் மிகவும் மதிப்பு மிக்க வீரர் என்ற விருதை கே கே ஆர் அணியின் சுனில் நரைன் கைப்பற்றினார்.
அவருக்கும் 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. நன்மதிப்புடன் விதிகளை பின்பற்றி விளையாடிய அணிக்கு வழங்கப்படும் Fair play விருது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வழங்கப்பட்டது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை 46 கோடியே 50 லட்சம் ரூபாய் பரிசு ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டு இருக்கிறது.