ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் சஞ்சு சாம்சன் தலைமையான ராஜஸ்தான் அணியும் பலப் பரிட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்ற கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும் ஜாஸ் பட்லர் 11 ரன்களிலும், கேப்டன் சஞ்சு, சாம்சன் 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

36 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியபோது ரியான் பராக்குடன் தமிழக வீரர் அஸ்வின் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். அஸ்வின் மூன்று சிக்ஸர்களை அடித்து 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்ப மறுபுறம் அதிரடி காட்டிய ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். இதில் ஆறு சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும்.
இதன் மூலம் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டேவிட் வார்னர் மற்றும் மிச்சல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கி அதிரடி காட்டினர். மிச்செல் மார்ஸ் ஐந்து பவுண்டர்களை விளாசி 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நிலையில் பர்கர் பந்தில் போல்ட் ஆனார்.
கேப்டன் பண்ட் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் அதிரடி காட்டிய டேவிட் வார்னர், ஒரு ரன்னில் தன்னுடைய அரைசதத்தை தவற விட்டு திரும்பினார். ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு பயம் காட்டி வந்த டெல்லி அணி, முக்கியமான நேரத்தில் தங்களுடைய விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழக்க தொடங்கியது.
குறிப்பாக சாகல் அபாரமாக செயல்பட்டு மூன்று ஓவர்களில் 19 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோன்று ஆவேஷ் காணும் அபாரமாக செயல்பட்டு நான்கு ஓவர்கள் வீசி 29 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆவேஷ் கான் அபாரமாக யாக்கர்களை வீசி வெறும் நான்கு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.