IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே மாபெரும் சாதனை வெற்றி.. ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங்கில் புதிய ரெக்கார்டு
கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 224 ரன்கள் என்ற கடினமான இலக்கை சேஸிங் செய்து வெற்றி பெற்று ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
2024 ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இரண்டாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. சுனில் நரைன் 56 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார். அதுவே அவரின் முதல் ஐபிஎல் சதம் ஆகும்.

இதே ராஜஸ்தான் அணி 2020 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக செசிங்கின் போது 224 ரன்கள் இலக்கை எட்டி இருந்தது. அதுவே வெற்றிகரமான சேஸிங்கில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதே சாதனையை மீண்டும் செய்தால் மட்டுமே இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
அந்த அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 9 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் 12, ரியான் பராக் 34, துருவ் ஜுரேல் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். இடையே கொல்கத்தா அணியின் ஸ்பின்னர்களை சமாளிக்க அஸ்வின் அனுப்பப்பட்டார். அவர் 11 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஆறாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹெட்மயர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
இந்த விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்து இருந்தார். அப்போது களத்துக்கு வந்த ரோவ்மன் போவல் 13 பந்துகளில் 26 ரன்கள் குவித்து போட்டியை மாற்றினார். அவர் ஒரு ஃபோர். மூன்று சிக்ஸ் அடித்து இருந்தார். அவர் ஆட்டமிழந்த போது கடைசி 3 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அதே சமயம், பட்லரை தவிர வேறு யாரும் ரன் எடுக்கும் திறன் கொண்ட வீரர்கள் இல்லை.
ஜோஸ் பட்லர் அப்போது கடுமையாக சோர்ந்து போயிருந்தார். ரன் ஓடுவதே அவருக்கு கடினமானதாக இருந்தது. இந்த நிலையில் பின் வரிசை வீரர்களுக்கு ஒரு பந்தை கூட சந்திக்கும் வாய்ப்பை கொடுக்காமல், கடைசி மூன்று ஓவர்களின் 18 பந்துகளையும் தானே சந்தித்தார். ஸ்டார்க் வீசிய 18வது ஓவரில் 18 ரன்கள் கிடைத்தது. அடுத்து ஹர்ஷித் ரானா வீசிய 19வது ஓவரில் 19 ரன்கள் எடுத்தார்.
கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பட்லர் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். அதன் பின் பவுண்டரி அடிக்க முயற்சி செய்தவர் ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் ஓடினார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் சரியாக பந்தை தூரமாக அடித்து விட்டு ஒரு ரன் ஓடி ராஜஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார் ஜோஸ் பட்லர்.
இதை அடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை இரண்டு முறை சேஸ் செய்த அணி என்ற சாதனையை செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதே போல வெற்றிகரமான சேஸிங்கில் கடைசி 6 ஓவர்களில் அதிக ரன் குவித்த அணி என்ற சாதனையையும் செய்தது. இந்தப் போட்டியில் கடைசி 6 ஓவர்களில் 96 ரன்கள் சேர்த்து இருந்தது ராஜஸ்தான் அணி.
Story first published: Wednesday, April 17, 2024, 8:47 [IST]
Other articles published on Apr 17, 2024


Click it and Unblock the Notifications