சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக செயல்பட்டு வருகிறார் ரவீந்திர ஜடேஜா. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 3 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்தார். அது ஐபிஎல் தொடரில் அவரது 100வது கேட்ச் ஆகும்.
இந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார். ஐபிஎல் தொடரின் வரலாற்றில் இதுவரை எந்த ஆல் - ரவுண்டரும் 1000 ரன்கள், 100 விக்கெட்கள் மற்றும் 100 கேட்ச்கள் என்ற மூன்று மைல்கல்களை எட்டியதில்லை. இந்த மைல்கல் சாதனையை முதலில் செய்த வீரர் ரவீந்திர ஜடேஜா மட்டுமே.

ரவீந்திர ஜடேஜா சிறந்த சுழற் பந்துவீச்சாளர் மட்டுமின்றி சிறந்த ஃபீல்டரும் கூட. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மொத்தம் இரண்டு கேட்ச்களை பிடித்தார். போட்டியின் முதல் பந்திலேயே பில் சால்ட் கொடுத்த கேட்ச் ஒன்றை பிடித்து அணிக்கு முதல் திருப்புமுனை கிடைக்க காரணமாக இருந்தார்.
ஆனால், அதன் பின் கொல்கத்தா அணியில் அதிக ரன் சேர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த கேட்ச் ஒன்றை பல அடி தூரம் ஓடி வந்து பிடித்தார். அது பார்க்க எளிதான கேட்ச் போல இருந்தாலும் ரவீந்திர ஜடேஜா சரியாக கணித்து ஓடி வந்து பந்தை பிடித்தார். அதன் மூலம் கடைசி ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்ற ஸ்ரேயாஸ் ஐயரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய சிஎஸ்கே அணி 17.4 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டி தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.