பெங்களூர் : ஆர்சிபி அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார்.
16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ஒரு முறை சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் ஆர்சிபி அணி தவித்து வருகிறது. ஆர்சிபி அணியை காட்டிலும் ஆர்சிபி ரசிகர்கள் தான் கூடுதம் சோகத்தில் உள்ளனர். ஒவ்வொரு சீசனிலும் மோசமான தோல்வியை அடைந்தாலும், ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்து கொண்டே போகிறது.

இதனால் 17வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல தீவிரமாக உள்ளது. இதற்கான கேமரூன் க்ரீன் உள்ளிட்ட வீரர்களை கொண்டு வந்துள்ளது. ஆனாலும் ஆர்சிபி அணி விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3 போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற 2 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தோல்வியடைந்துள்ளது.
வழக்கமாக ஆர்சிபி அணியின் பவுலிங்கே தோல்விக்கு காரணமாக இருக்கும். ஆனாலும் இம்முறை முகமது சிராஜ், மேக்ஸ்வெல், யாஷ் தயாள், மயங்க் டாகர் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்தி வருகிறது. கேப்டன் டூ பிளசிஸ், மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் இதுவரை ஒரு போட்டியில் கூட சிறப்பாக செயல்படவில்லை.
இந்த நிலையில் ஆர்சிபி அணியின் பேட்டிங் குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆர்சிபி அணியின் பேட்டிங் தான் இம்முறை அவர்களுக்கு பிரச்சனையை கொடுக்கிறது. டாப் ஆர்டரில் நட்சத்திர வீரர்கள் மற்றும் சீனியர் வீரர்கள் இறங்கிவிடுகிறார்கள். அதற்கு பதிலாக லோம்ரோர், அனுஜ் ராவத் போன்றோரை டாப் ஆர்டரில் இறக்கி அதிரடியாக விளையாட வைக்க வேண்டும்.
டூ பிளசிஸ், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் பேட்டிங் செய்ய வேண்டும். ஆனால் ஆர்சிபி அணியில் சேஸிங்கின் போது அதிக பிரஷரை இளம் வீரர்களுக்கு கொடுத்துவிடுகிறார்கள். அவர்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு தான் போராடுவார்கள். அதற்கு அனுபவம் அதிகம் தேவை. கேக்கில் இருக்கும் க்ரீமை போல் சீனியர் வீரர்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.