அகமதாபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடரில் ஆர்சிபி அணி எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறது. இது சிஎஸ்கே அணி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏனென்றால் லீக் சுற்றில் சிஎஸ்கேவை தோற்கடித்து பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறிய போது அந்த அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்களை வெறுப்பேற்றும் வகையில் நடந்து கொண்டார்கள்.

ஏதோ ஐபிஎல் கோப்பை வென்று விட்டோம் என்பது போல் ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். இதேபோன்று ஆர்சிபி வீரர்களும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதையே பெரிய அளவில் கொண்டாடினர். டிரெஸ்ஸிங் ரூம் திருவிழா போல் மாறியது. சனிக்கிழமை இரவு போட்டி முடிந்த நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி வரை ஆர்சிபி வீரர்கள் பார்ட்டியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். ஆர்சிபி இன்னும் கோப்பையை வெல்லவில்லை. ஆனால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதையே இப்படி கொண்டாடி வருகிறார்கள் என்று பலரும் சாடி இருந்தார்கள். இந்த நிலையில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவி வெளியேறி இருப்பது பல்வேறு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போட்டியில் தோற்ற பிறகு ஆர்சிபி வீரர்கள் ஒவ்வொரு மூலையில் தனியாக அமர்ந்து சோகமாக இருந்தனர்.
விராட் கோலி 17 ஆண்டுகளாக நம்மால் இந்த ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற சோகத்தில் இருந்தார். அப்போது பேசிய அவர் இந்த சீசனில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. முதல் பாதியில் தாங்கள் எப்போதும் விளையாட ஆட்டம் அளவுக்கு கொஞ்சம் கூட செயல்படவில்லை. எனினும் இந்த சீசனில் இரண்டாவது பாதியில் அனைத்தும் மாறியது.
தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றோம். இதன் மூலம் எங்களின் திறன் மற்றும் எங்களுடைய போர் குணம் அனைத்தும் வெளியானது. குறிப்பாக சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு சென்றதை என்னால் மறக்க முடியாது. ஒவ்வொரு வீரர்களும் கடுமையாக போராடி சிறப்பாக செயல்பட்டார்கள். எனினும் எங்களால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.
வேதனையாக இருக்கிறது என்று விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக் இந்த சீசன் எங்களுக்கு சிறப்பாகவே அமைந்தது. நாங்கள் சீசன் பிற்பகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றதன் மூலம் நாங்கள் யாரென்று ரசிகர்களுக்கு காட்டி இருக்கின்றோம். எனினும் விளையாட்டில் எப்போதுமே ஒரு நல்ல முடிவு என்றும் அமையாது என நினைக்கின்றேன் என்று கூறினார். இதை தொடர்ந்து பேசிய டுபிளசிஸ் பிளே ஆப் சுற்றில் வெளியேறி இருப்பது ஏமாற்றமாக இருப்பதாக தெரிவித்தார்.
எனினும் தங்களுடைய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டதோடு இறுதிப் போட்டியில் பனிப்பொழிவு தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் இன்றைய ஆட்டத்தில் ஒரு 20 ரன்கள் கூட அடித்து இருந்தால் வெற்றியை பெற்று இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.