ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடித்தார். 72 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 113 ரன்கள் குவித்தார். இதில் 12 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.
விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 156 என்ற அளவில் இருந்தது. விராட் கோலியின் இந்த இன்னிங்சால் மட்டும் ஆர்சிபி அணி 183 என்ற நல்ல ஸ்கோரை அந்த மைதானத்தில் எட்டியது. மற்ற வீரர்கள் யாரும் விராட் கோலிக்கு துணை நிற்கவில்லை.

இந்த நிலையில் விராட் கோலி இவ்வளவு ரன்கள் அடித்தும் ரசிகர்கள் அவர் டி20 கிரிக்கெட்டுக்கு சரிவர மாட்டார் என்று விமர்சித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது விராட் கோலி தன்னுடைய இன்னிங்ஸில் முதல் பகுதியில் அதிக பந்துகளை வீணடித்து விட்டதாகவும் பிற்பகுதியில் தான் அவர் அதிரடியாக விளையாடியதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த காலமெல்லாம் மலையேறிவிட்டதாகவும் தற்போது டி20 யில் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்றால் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 200 அளவு வைத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக நேற்று ஆட்டத்தில் விராட் கோலி எட்டு பந்துகளில் 10 ரன்களும், 12 பந்துகளில் 16 ரன்களும், 16 பந்துகளில் 24 ரன்களும் அடித்திருந்தார்.
இது அனைத்துமே பவர் பிளேவில் என்பது குறிப்பிடத்தக்கது. பவர் பிளே ஐந்தாவது ஓவர் முடிவில் 21 பந்துகளை எதிர்கொண்டு 26 ரன்களும், ஆறாவது ஓவர் முடிவில் 25 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்களும், ஏழாவது ஓவர் முடிவில் 28 பந்துகளை எதிர்கொண்டு 35 ரன்கள், எட்டாவது ஓவர் முடிவில் 31 பந்துகளை எதிர்கொண்டு 37 ரன்களும், ஒன்பதாவது ஓவர் முடிவில் 32 பந்துகளை எதிர்கொண்டு 38 ரன்களும் விராட் கோலி அடித்து இருந்தார்.
அதன் பிறகு இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்ட விராட் கோலி 39 பந்துகளில் அரை சதம் கடந்தார். முதல் 50 ரன்களை எடுக்க விராட் கோலி 39 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் அதன் பிறகு கொஞ்சம் அதிரடியை காட்டினார். எனினும் விராட் கோலி 67 பந்துகளில் தான் சதம் அடித்தார். விராட் கோலியின் இந்த இன்னிங்ஸ் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
டி20 கிரிக்கெட் பொருத்தவரை கிட்டத்தட்ட 50 பந்துகளில் எல்லாம் சதம் அடித்து விட வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். விராட் கோலி இந்த போட்டியில் சதம் அடித்ததால் அவர் மீது தவறு இல்லை என்ற பொருள் கிடையாது என்றும் அவர் இன்னும் ஆக்ரோஷமாக விளையாடி இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் களமிறங்க ஜாஸ் பட்லர் 30 பந்துகளில் அரை சதமும், 58 பந்துகளில் சதமும் அடித்து இருந்தார். இதனை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள் விராட் கோலி தொடக்கத்திலிருந்து அதிரடியாக ஆடி இருந்தால் ராஜஸ்தான் அணிக்கு 200 ரன்களுக்கு மேல் இலக்கை ஆர்சிபியால் நிர்ணயத்திற்கு முடியும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள கோலி ரசிகர்கள் நேற்று ஆட்டத்தில் விராட் கோலி மட்டும் தான் தனி ஆளாக நின்று விளையாடியதாகவும் இதன் காரணமாக அவர் தனது விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்பதற்காக பொறுமையை காத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். விராட் கோலிக்கு வேறு ஏதேனும் வீரர் துணையாக இருந்திருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்றும் சதம் அடித்தும் விராட் கோலியை குறை சொல்வது தவறு என்றும் அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.