கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலிக்கு தவறாக அவுட் கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது.
ஹர்ஷித் ராணா வீசிய ஃபுல் டாஸ் பந்து இடுப்பு உயரத்துக்கு வந்த நிலையில், கோலி அந்த பந்தை அடித்தார். ஹர்சித் ராணாவே பந்தை கேட்ச் பிடித்தார். ஆனால், விராட் கோலி அந்த பந்து இடுப்பு உயரத்துக்கு மேலே வந்ததாகக் கூறி அது நோ பால் என ரிவ்யூ கேட்டார்.

மூன்றாவது அம்பயர் பந்தை ரீப்ளே செய்து தொழில்நுட்ப உதவியுடன் பார்க்கையில், விராட் கோலி கிரீஸை விட்டு சில ஆடு தூரம் முன்னே வந்து பந்தை அடித்து இருக்கிறார். ஆனால், விதிப்படி பந்து கிரீஸை வந்து அடையும் போது இடுப்பு உயரத்துக்கு மேலே இருந்தால் மட்டுமே அது நோ பாலாக கருதப்படும்.
ஆனால், விராட் கோலி பந்தை சில அடி தூரம் முன்பே சென்று சந்தித்தார். மேலும், தொழில்நுட்பத்தின் உதவிப்படி விராட் கோலி நேராக நிற்கும் போது உள்ள அவரது இடுப்பு உயரத்தை விட சில இன்ச் குறைவான உயரத்தில் தான் பந்து கிரீஸை அடைந்தது என்பதை மூன்றாவது அம்பயர் கண்டறிந்தார். ஆனால் அந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத விராட் கோலி தன் அதிருப்தியை வெளிப்படுத்தி களத்தை விட்டு வெளியேறினார்.
போட்டி முடிந்த பின் நான்காவது அம்பயர், விராட் கோலியை அழைத்து ஏன் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது என விளக்கம் அளித்தார். அப்போதும் விராட் கோலி அவரிடம் தான் குனிந்து நின்றதாக வாதம் செய்தார். போட்டிக்கு பின் பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளேசிஸும் கூட அந்த அவுட் குறித்த சரியான விளக்கம் எங்களுக்கு கிடைக்கவில்லை என கூறி இருந்தார். ஆனால், உண்மையில் அது அவுட் தான் என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி பெங்களூரு ரசிகர்களுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.