சிங்கம் களமிறங்கிருச்சே.. காயத்தில் இருந்து மீண்டு வந்த சிஎஸ்கே வீரர்.. ஆர்சிபி போட்டியில் கம்பேக்?
பெங்களூர் : சிஎஸ்கே அணியின் இளம் வீரர் தீபக் சஹர் காயமடைந்த நிலையில், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த போட்டியில் வென்றாலே சிஎஸ்கே அணியால் எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்குள் கால் பதிக்க முடியும். இதற்காக சிஎஸ்கே அணி வீரர்கள் பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சீசனில் சிஎஸ்கே அணி வீரர்களின் காயத்தால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. ஏற்கனவே பதிரானா, தீபக் சஹர் ஆகியோர் காயத்தால் விலகிய நிலையில், தேசிய அணியின் அழைப்பால் முஸ்தஃபிசுர் ரஹ்மான் மற்றும் மொயின் அலி ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர். இதனால் 2வது கட்ட பவுலர்களை வைத்தே சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது.
இந்த நிலையில் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியின் போது இளம் நட்சத்திர வீரர் தீபக் சஹர் பவுலிங் செய்ய தொடங்கியுள்ளார். பயிற்சியாளர் பிளெமிங் மற்றும் தோனியின் முன்னிலையில் தீபக் சஹர் பவுலிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தீபக் சஹர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய தீபக் சஹர் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பவர் பிளே ஓவர்களில் எதிரணியினர் அதிக ரன்களை விளாசுவதற்கும் தீபக் சஹர் காரணமாக அமைந்தார். பவர் பிளே ஓவர்களில் தீபக் சஹரின் ஸ்விங் கொஞ்சம் கூட எடுபடவில்லை.
இதனால் பலரும் தீபக் சஹரை சிஎஸ்கே அணியில் இருந்து கழற்றிவிட வேண்டும் என்று காட்டமாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் தீபக் சஹர் சரியான நேரத்தில் அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சின்னச்சாமி மைதானத்தில் கடந்த சில போட்டிகளாக ஸ்விங் கூடுதலாக இருக்கிறது.
இதனை பயன்படுத்தி சிராஜ், யாஷ் தயாள், ஃபெர்குசன் உள்ளிட்ட வீரர்கள் விக்கெட் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால் சிஎஸ்கே அணியிலும் ஸ்விங் பவுலர்களுக்கான தேவை உள்ளது. இதனால் இம்பேக்ட் பிளேயராக தீபக் சஹர் பவுலிங் செய்தால், சிஎஸ்கே அணியால் பவர் பிளேவில் நிச்சயம் விக்கெட் வீழ்த்த முடியும் என்று பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications