பெங்களூர் : சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான் தனது ஃபேவரைட் பேட்ஸ்மேன் என்று பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. வாழ்வா, சாவா போட்டியில் சிஎஸ்கே அணி விளையாட உள்ள நிலையில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு அக்னி பரீட்சையாகவும் மாறியுள்ளது. ஏனென்றால் தோனி, பிளெமிங் உள்ளிட்டோரின் வழிக்காட்டல் இருந்தும் சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை என்றால், அது ருதுராஜ் கெய்க்வாடின் தவறாகவே அமையும்.

கேப்டன் பொறுப்பை ஏற்றாலும், பேட்ஸ்மேனாகவும் ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் மிரட்டியுள்ளார். 13 போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ் கெய்க்வாட், ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 583 ரன்களை விளாசி இருக்கிறார். இதுகுறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மைக் ஹசி பேசுகையில், ருதுராஜ் கெய்க்வாட்-க்கு இந்த சீசன் சவால் நிறைந்தது என்றே சொல்வேன்.
ஏனென்றால் மிகச்சிறந்த கேப்டன் ஒருவரின் பதவி ருதுராஜ்-க்கு அளிக்கப்பட்டுள்ளது. தோனியின் இடத்திற்கு வந்ததே மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும். அப்படியான சூழலில், ருதுராஜ் பேட்டிங்கில் அசத்தியிருப்பதை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஒரு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் மனதிலும், மூளையிலும் ஏராளமான விஷயங்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.
திட்டமிடல், யுக்திகள், அணியின் நலன்கள் என்று அனைத்தையும் கவனத்தில் வைக்க வேண்டும். இவையெல்லாம் தலையில் இருந்த போதும், பேட்டிங்கில் அசத்தியதன் மூலமாக உலகிற்கு ருதுராஜ் அவரின் திறமையை நிரூபித்துள்ளார். நான் நடுநிலை இல்லாமல் கூட இந்த கருத்தை சொல்லலாம். ஆனால் இப்போது ருதுராஜ் கெய்க்வாட் தான் என்னுடைய ஃபேவரைட் கிரிக்கெட் வீரர் என்று தெரிவித்துள்ளார்.
மிஸ்டர் கிரிக்கெட் என்று கொண்டாடப்படும் மைக் ஹசி, எப்போதும் கிரிக்கெட் இலக்கணத்தில் விளையாடும் வீரர்களை அதிகமாக மதிப்பார். சிஎஸ்கே அணியில் விளையாடிய போது அனைவரும் தோனியை கொண்டாடிய போது மைக் ஹசி பத்ரிநாத்தையும், முரளி விஜயையும் அதிகமாக பாராட்டி பேசுவார். தற்போது ருதுராஜை மைக் ஹசி பாராட்டி இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.