பெங்களூர் : 2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கும், தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடருக்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் மே 18ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வென்றால், எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஆனால் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் வென்றாலோ, பெங்களூர் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

இதனால் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டி கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியாக அமைந்துள்ளது. இதனால் இரு அணி ரசிகர்களும் அதிக ஆர்வமுடன் இருக்கின்றனர். இந்த நிலையில் 2012ஆம் ஆண்டு போலவே இந்த சீசனிலும் சிஎஸ்கே அணிக்கு தொடர்ச்சியாக சம்பவங்கள் நடந்து வருவது தெரிய வந்துள்ளது.
2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி 12 முறை டாஸில் தோல்வியடைந்தார். தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 11 முறை டாஸில் தோல்வியடைந்துள்ளார். அதேபோல் 2012 சீசனின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெற்றது. தற்போதும் இறுதிப்போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கொல்கத்தா அணியும் டாப் 2 இடங்களில் புள்ளிப்பட்டியலில் நிறைவு செய்தது. தற்போது கேகேஆர் அணி டாப் 2 இடங்களில் நிறைவு செய்யும் நிலையில் உள்ளது. அதேபோல் 2012 சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு கடைசி போட்டியில் வெற்றிபெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த போட்டியில் கடைசி பந்தில் சிஎஸ்கே அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பிராவோ சிக்ஸ் அடித்து வெற்றிபெற்றார். இதனால் சிஎஸ்கே அணியும் நிச்சயம் ஆர்சிபி அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி வெற்றிபெறும் என்று ரசிகர்கள் கணித்து வருகின்றனர். அதேபோல் தோனி தனது கடைசி போட்டியை சேப்பாக்கம் மைதானத்திலேயே விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.