சென்னை : 2014ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததற்கான காரணம் குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி விளக்கம் அளித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் தோனி, உடனடியாக சொந்த ஊரான ராஞ்சிக்கு புறப்பட்டார். இதனால் தோனியின் ஓய்வு குறித்த பேச்சுகள் அதிகமாகியுள்ளன.

தோனி ஓய்வை அறிவித்துவிட்டாரா அல்லது சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் முடிவு என்ன என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி, 2014ஆம் ஆண்டு டிசம்பரிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கான காரணம் குறித்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் விளக்கம் கொடுத்துள்ளார்.
தோனி பேசுகையில், இந்திய அணிக்காக நீண்ட ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் போது, குடும்பத்தினருடன் நேரம் செலவிட வாய்ப்பே கிடைககது. 2015ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 3 வடிவங்களிலும் விளையாடி கொண்டிருந்தேன். அதனால் சொந்த ஊரில் நான் இருப்பதே அரிதாக மாறியது. ஒவ்வொரு கிரிக்கெட் தொடருக்கும் இடையில் 5 முதல் 6 நாட்கள் இடைவெளி தான் இருக்கும்.
அப்போதும் கூட சில அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய தேவை இருக்கும். அதேபோல் வேறு மைதானங்களுக்கு பயணிக்க வேண்டிய நிலை வரும். அதனால் சொந்த ஊரான ராஞ்சியில் 2 நாட்கள் தங்குவதே பெரிய விஷயமாகியது. அந்த 2 நாட்களில் தான் அனைத்து சொந்த விஷயங்களையும் பார்த்து கொள்ள வேண்டும். ஆனால் 2015ஆம் ஆண்டுக்கு பின் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
ஏனென்றால் பெற்றோருக்கு வயதாகி கொண்டே போவதை உணர்ந்தேன். அதேபோல் மனைவியுடன் நேரம் செலவிட முடியாத நிலை இருந்தது. அதேபோல் குழந்தைகளும் வளர்ந்து வந்ததை அறிந்தேன். அதனால் 2014 இறுதியிலேயே ஓய்வை அறிவித்தேன் என்று கூறியுள்ளார். இந்திய அணிக்காக கூடுதலாக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தால், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமை தோனிக்கு கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.