பெங்களூர் : கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் என்னை யாராலும் பார்க்க முடியாது என்று நட்சத்திர வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசியவர்களின் பட்டியலில் 13 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 5 அரைசதங்கள் உட்பட 661 ரன்களை குவித்து முதலிடத்தில் இருக்கிறார் விராட் கோலி. இந்த சீசனின் முதல் பாதியில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் மீது விமர்சனம் வைத்த பலருக்கும், தனது பேட்டால் பதிலடி கொடுத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ள நிலையில், விராட் கோலி உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு சாதகமாக மாறியுள்ளது. ஏற்கனவே ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அசத்தலான விளையாடி தொடர் நாயகன் விருதை கைப்பற்றிய விராட் கோலி, இம்முறை இந்திய அணிக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்புடன் இருக்கிறார்.
இதனிடையே விராட் கோலி 35 வயதை எட்டிவிட்ட சூழலில், ஓய்வு பற்றிய பேச்சுகளும் எழுந்துள்ளன. ஏற்கனவே ஒருநாள் தொடருக்கு விராட் கோலி முக்கியத்துவம் அளிப்பதை குறைத்துள்ள நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் டி20 போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஓய்வு குறித்து விராட் கோலி பேசுகையில், ஒவ்வொரு முறையும் வெற்றிபெற வேண்டும் என்ற பசியுடன் இருப்பதற்கான காரணம் மிகவும் எளிமையானது. ஒரு விளையாட்டு வீரராக, எங்கள் அனைவருக்கும் ஓய்வு காலம் என்பது நிச்சயம். அதனால் நான் பின்னோக்கி வேலை செய்கிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த நாளில் இப்படி விளையாடி இருக்கலாம் என்ற சிந்தனையுடன் ஓய்வு பெற வேண்டும் என்று விரும்பவில்லை.
ஒவ்வொரு நாளும் கடந்த கால கிரிக்கெட் குறித்து சிந்திக்கவும் விருப்பமில்லை. என் கிரிக்கெட் வாழ்வில் இதனை செய்திருக்கலாம் என்று பின்னாட்களில் வருத்தமடைய கூடாது. ஒருமுறை ஓய்வை அறிவித்துவிட்டால், கிரிக்கெட் களம் விட்டு வெளியேறினால், யாரும் என்னை பார்க்கவே முடியாது. அதனால் களத்தில் இருக்கும் வரை, 100 சதவிகித உழைப்பை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதுதான் என்னை ஒவ்வொரு நாளும் ஓட வைக்கிறது என்று தெரிவித்தார்.