பெங்களூர் : சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 68வது போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தது. இதனால் ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று அறிக்கப்பட்டது. இதன்பின் சிஎஸ்கே அணி தரப்பில் ருதுராஜ் - ரச்சின் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மேக்ஸ்வெல் வீசிய முதல் பந்திலேயே ருதுராஜ் டக் அவுட்டாகி வெளியேறினார்.

தொடர்ந்து வந்த டேரல் மிட்சல் 4 ரன்களில் ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ரஹானே - ரச்சின் ரவீந்திரா கூட்டணி இணைந்தது. ரஹானே வந்ததும் அபாரமாக சிக்ஸ் அடிக்க, மறுமுனையில் ரச்சின் ரவீந்திரா நிதானமாக ஆடினார். இதனால் 6 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 58 ரன்களை சேர்த்திருந்தது. தொடர்ந்து இருவரின் அதிரடியால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
சிறப்பாக ஆடிய ரஹானே 22 பந்துகளில் 33 ரன்களில் எடுத்து ஆட்டமிழகக், உடனடியாக சிவம் துபே களம் புகுந்தார். சிவம் துபேவை கட்டுப்படுத்த ஆர்சிபி அணி ஃபீல்டிங்கில் பல்வேறு மாற்றங்களை செய்தது. இதனால் சிவம் துபே ரன்களை எடுக்க முடியாமல் திணறினார். இந்த நிலையில் ஃபெர்குசன் வீசிய 12வது ஓவரில் சிக்சர் அடித்து ரச்சின் ரவீந்திரா அரைசதத்தை எட்டினார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் விளாசப்பட்டது. ஆனால் அடுத்த ஓவரில் சிவம் துபே செய்த தவறால் ரச்சின் ரவீந்திரா 37 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
தொடர்ந்து கேமரூன் க்ரீன் வீசிய அடுத்த ஓவரிலேயே சிக்ஸ் அடிக்க முயன்று சிவம் துபே 15 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த சான்ட்னரும் 3 ரன்களில் வெளியேற, சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. பின்னர் ஜடேஜா - தோனி கூட்டணி இணைந்தது. அப்போது சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற 24 பந்துகளில் 63 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் யாஷ் தயாள் வீசிய 17வது ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டது.
சிராஜ் வீசிய 18வது ஓவரில் 15 ரன்கள் அடிக்கப்பட்டது. அப்போது சிஎஸ்கே அணி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மைதானமும் பதற்றமடைந்தது. இந்த நிலையில் ஃபெர்குசன் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸ், இரு பவுண்டரி உட்பட 18 ரன்கள் விளாசப்பட்டது. இந்த நிலையில் கடைசி ஓவரில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல 17 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் பந்திலேயே தோனி சிக்ஸ் அடிக்க, 2வது பந்தில் தோனி 25 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஷர்துல் தாக்கூர் 3வது பந்தில் ரன் சேர்க்க முடியாமல் திணற, 3 பந்துகளில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய தேவை எழுந்தது.
4வது பந்தில் ஷர்துல் தாக்கூர் ஒரு ரன் எடுக்க, கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. சரியாக ஜடேஜா களத்திற்கு வந்தார். கிட்டத்தட்ட 2023ஆம் ஆண்டு இறுதிப்போட்டியை நினைவுப்படுத்தியது. அப்போது வீசப்பட்ட 5வது பந்தில் ஜடேஜாவின் பேட்டில் படாமல் மிஸ்ஸாகியது. அப்போது ஆர்சிபி அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கினர். கடைசி பந்தும் டாட் பாலாக மாறியது. இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் காரணமாக சிஎஸ்கே அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதோடு, பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது.