பெங்களூர் : சின்னசாமி மைதானத்தின் வெளியில் நின்றிருந்த சிஎஸ்கே ரசிகர்கள் பலரையும் ஆர்சிபி ரசிகர்கள் எல்லை மீறி துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய டூ பிளசிஸ் 39 பந்துகளில் 54 ரன்களை விளாசினார்.

இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது. இந்த வெற்றியால் ஆர்சிபி ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முதல் 8 போட்டியில் ஒரு வெற்றியுடன் இருந்த ஆர்சிபி, அடுத்தடுத்த 6 போட்டியில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய கம்பேக்காக இது அமைந்துள்ளது. இந்த போட்டியை சுமார் 30 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர். ஆர்சிபி ரசிகர்களுக்கு இணையாக சிஎஸ்கே ரசிகர்களும் மைதானத்தில் குவிந்தனர். இதனால் மைதானத்தில் இரு அணிகளின் ஜெர்சியும் அதிகளவில் காணப்பட்டன. ஆட்டத்தில் இரு அணிகளின் கரகோஷமும் மாறி மாறி எழுந்து கொண்டே இருந்தன.
இறுதியாக ஆர்சிபி வென்ற சூழலில், சிஎஸ்கே அணி ரசிகர்கள் பலரும் சோகத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினர். அப்போது ஆர்சிபி ரசிகர்கள் பலரும் சிஎஸ்கே ரசிகர்களை எல்லை மீறி துன்புறுத்தியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகரான சரவணன் ஹரி தனது ட்விட்டர் பக்கத்தில், சிஎஸ்கே ஜெர்சியுடன் சின்னசாமி மைதானத்திற்கு வெளியில் இருந்த அனைவரையும் ஆர்சிபி ரசிகர்கள் துன்புறுத்தினார்கள்.
ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு கூட காட்டப்படவில்லை. சிலர் குடித்துவிட்டு, அதிக சத்தத்துடன் வந்து துன்புறுத்தினார்கள். சாதாரணமாக நடந்து சென்றால் கூட ஆர்சிபி ஜெர்சியுடன் வந்து எங்களை பார்த்து நடு விரலை காட்டி செல்வதாக பதிவிட்டுள்ளார். ஆர்சிபி ரசிகர்களின் இந்த செயல்பாடுகள் சிஎஸ்கே ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.