பெங்களூர் : அடுத்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலியை நியமனம் செய்ய வேண்டும் என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கோரிக்கை வைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி விளையாடிய 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 10 நாட்களுக்கு முன்பாக புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் இருந்த ஆர்சிபி அணி, திடீரென எழுச்சி பெற்று 5வது இடத்திற்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இதற்கு விராட் கோலி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இந்த சீசனில் தொடக்கம் முதலே ஆர்சிபி அணிக்காக சீராக ரன்களை சேர்த்து வந்த ஒரே வீரர் விராட் கோலி தான். 13 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 661 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் ஆரஞ்ச் கேப் ரேசில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார்.
இந்த ஆர்சிபி அணி குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசுகையில், ஒருவேளை இந்த சீசனில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றால், அடுத்த மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஒருவரை கேப்டனாக நியமனம் செய்ய வேண்டும். விராட் கோலியை ஏன் மீண்டும் கேப்டனாக கொண்டு வரக்கூடாது?. ஏனென்றால் சென்னை அணியில் தோனி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அனைவரும் அறிவோம்.
அதுபோல் விராட் கோலி சிறந்த கேப்டன். ஆர்சிபி அணி என்ன மாதிரியான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது விராட் கோலி நன்றாக தெரியும். ஆர்சிபி அணியின் ஆட்டத்தில் ஆக்ரோஷம் அதிகரித்து கொண்டே செல்கிறது. அனைவரும் கூடுதல் கவனத்துடன் வெற்றிபெறும் வெறியுடன் இருக்கிறார்கள். இதுதான் விராட் கோலி அணிக்குள் கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக தான் விராட் கோலி மீண்டும் தலைமை பொறுப்பிற்கு வர வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த சீசனில் ஆர்சிபி அணியின் கேப்டனாக டூ பிளசிஸ் செயல்பட்டு வருகிறார். 39 வயதாகும் டூ பிளசிஸ் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் அசத்தலாக செயல்பட்டாலும், கன்சிஸ்டன்சியில் சொதப்பி வருகிறார். 13 போட்டிகளில் விளையாடி 367 ரன்களை விளாசியுள்ள டூ பிளசிஸ், அடுத்த சீசனுக்கு முன் ஆர்சிபி அணியால் தக்க வைக்கப்படுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.