பெங்களூர் : சிஎஸ்கே அணிக்கு எதிராக கடைசி ஓவரில் சிறப்பாக பவுலிங் செய்த யாஷ் தயாளை பாராட்டி நட்சத்திர வீரர் ரிங்கு சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கம்பேக் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தாலும், ரசிகர்கள் பலரும் யாஷ் தயாளின் கம்பேக்கை கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற 17 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை வீச யாஷ் தயாள் அழைக்கப்பட்டார்.

ஏற்கனவே யாஷ் தயாள் குஜராத் அணிக்காக விளையாடிய போது, கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் கேகேஆர் அணியின் ரிங்கு சிங், கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி ஆட்டத்தை முடித்தார். ஐபிஎல் தொடருக்கே ரிங்கு சிங்கின் 5 சிக்சர்கள் விளம்பரமாகி போனது. இதனால் யாஷ் தயாளின் கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வந்ததாக பார்க்கப்பட்டது.
ஆனால் யாஷ் தயாளை இந்த சீசனில் ஆர்சிபி அணி விலைக்கு வாங்கியது. இதன்பின் யாஷ் தயாளுக்கு தொடக்கம் முதலே ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை பார்த்த வர்ணனையாளர் முரளி கார்த்திக், someone's trash is someone's treasure என்று கூறி அவமானப்படுத்தினார். இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான கடைசி ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார் யாஷ் தயாள்.
முதல் பந்தில் தோனி சிக்சர் அடித்த போதும், அடுத்த பந்திலேயே தோனியின் விக்கெட்டை வீழ்த்தினார் யாஷ் தயாள். இந்த சீசனில் யாஷ் தயாள் 13 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் யாஷ் தயாளை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் தோனிக்கு எதிராகவே கடைசி ஓவரை சிறப்பாக வீசிய யாஷ் தயாளுக்காக ரிங்கு சிங் இன்ஸ்டாகிராமில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பதிவில், "கடவுளின் திட்டம் இதுதான் போல பேபி" என்று யாஷ் தயாளின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ரிங்கு சிங். இதன் மூலமாக இவர்கள் இருவரின் நட்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட் விளையாட்டை இருவருமே விளையாட்டாக பார்ப்பதோடு, சரியான நேரத்தில் ஆதரவாக இருப்பதும் பாராட்டுகளை பெற்று வருகிறது.