கடைசி ஓவரில் தோனி நின்றார்.. பதற்றம் எகிறிவிட்டது.. யாஷ் தயாளுக்கு விருதை கொடுங்க.. டூ பிளசிஸ்!
பெங்களூர் : கடைசி ஓவரின் போது தோனி களத்தில் இருந்ததால் கொஞ்சம் பீதியடைந்ததாகவும், ஆனால் யாஷ் தயாள் அசத்தலாக பவுலிங் செய்ததாகவும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதோடு, பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 218 ரன்களை எடுத்து அசத்தியது. தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

இதன் மூலமாக தொடர்ந்து 6 போட்டிகளை வென்று ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்த வெற்றி குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ் பேசுகையில், அற்புதமான வெற்றியுடன் ஆர்சிபி அணியின் லீக் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன. இந்த ஐபிஎல் தொடரில் முதல் பேட்டிங் ஆடிய பிட்ச்களில், இதனை போல் ஒரு கடினமான பிட்சில் விளையாடவில்லை. மழை பெய்து மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது, 150 ரன்கள் எடுப்பதே சிரமம் என்று நினைத்தோம்.
அப்போது நடுவர்களுடன் உரையாடிய போது, பிட்சில் அதிகமான ஈரப்பதம் இருந்தது. அதனால் கூடுதல் நேரம் தேவைப்பட்டதாக கூறினார்கள். அதன்பின் விளையாடிய போது சான்ட்னரிடம் 5வது நாள் ராஞ்சி பிட்ச் போல் இருந்ததாக கூறினேன். இந்த பிட்சில் 200 ரன்கள் சேர்த்தது நிச்சயம் நம்ப முடியாத சாதனை. கடந்த 6 போட்டிகளில் நாங்கள் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளோம். சில போட்டிகளில் ஸ்லோவாக தொடங்கினாலும், அடுத்தடுத்து அசத்தினோம்.
ஒரு கட்டத்தில் தோனி கடைசி ஓவரில் களத்தில் நின்ற போது, மனதிற்குள் கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டது. எத்தனை முறை இவர் ஆட்டத்தை ஃபினிஷ் செய்துள்ளார் என்று நினைத்து கொண்டேன். ஆனால் சிறப்பாக பவுலிங் செய்து அசத்திய யாஷ் தயாளுக்கு நிச்சயம் ஆட்டநாயகன் விருதை கொடுக்க வேண்டும். கடைசி ஓவரை அற்புதமாக வீசினார். கடைசி ஓவரில் அவரிடம் ஸ்லோயர் பால்களை வீச மட்டுமே கூறினேன். அதேபோல் திறமையை பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் கவலையின்றி பவுலிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.
சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். நிச்சயம் ரசிகர்களுக்கு நன்றி கூற வேண்டும். ஏனென்றால் நாங்கள் தோல்வியடைந்த போதும், ஆர்சிபி ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். அதன் காரணமாக நன்றி கூட கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications