பெங்களூர் : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடவுள்ளது. டெல்லி அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வியுடன் உள்ளது. இதனால் அடுத்து விளையாடவுள்ள 2 போட்டிகளில் கட்டாய வெற்றியை பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நாளை ஆர்சிபி - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்கிறது. இரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போட்டி என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பவுலிங் செய்யும் அணி ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும். ஆனால் 3 முறை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்றால், அபராதம் மட்டுமல்லாமல் கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். இதன் காரணமாகவே டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லை. ஏற்கனவே சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் சரியான நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்பதால் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பின் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியிலும் ஓவர்களை வீசி முடிக்காததால், ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது 3வது முறையாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்கவில்லை. இதனால் பிசிசிஐ தரப்பில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, டெல்லி அணியில் விளையாடிய வீரர்களுக்கு 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் டெல்லி அணியின் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சீசனில் ரிஷப் பண்ட் 12 போட்டிகளில் விளையாடி 413 ரன்களை விளாசி இருக்கிறார். கேப்டன்சியிலும் அசத்தி வருவதால், அவர் இல்லாமல் ஆர்சிபி அணியை வீழ்த்துவது கடினமாக பார்க்கப்படுகிறது. இதனால் நடவடிக்கையை எதிர்த்து டெல்லி அணி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் மீதான நடவடிக்கை சிஎஸ்கே அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.