பெங்களூர் : விராட் கோலியை விமர்சிக்க வேறு காரணங்கள் கிடைக்காததால், ஸ்ட்ரைக் ரேட்டை வைத்து விமர்சித்து வருகிறார்கள் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இருப்பினும் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த சீசனில் மட்டும் 10 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 500 ரன்களை விளாசி இருக்கிறார்.

ஆனால் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. விராட் கோலியின் பேட்டிங் சராசரி 71.43ஆக இருந்தாலும், ஸ்ட்ரைக் ரேட் 147.49ஆக மட்டுமே உள்ளது. இதனால் விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த வேண்டும் என்றும், மிடில் ஓவர்களில் கூடுதல் ஆக்ரோஷத்துடன் விளையாட வேண்டும் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பேசுகையில், இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதன் காரணமாகவே விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளது. ஒரு வீரர் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் சதம் விளாசுகிறார் என்றால், எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அந்த அணி நிச்சயம் வெற்றிபெற வேண்டும்.
அப்படி வெற்றிபெற முடிந்தால், எந்த விமர்சனமும் இருக்காது. ஆனால் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் தான் உள்ளது. விராட் கோலி கேப்டனாக இருக்கும் போது, அவர் மீது அழுத்தம் இருந்தது. ஆனால் தற்போது கேப்டன்சியில் இருந்து விலகிய போதும், விராட் கோலி மீதான அழுத்தம் குறைந்ததாக தெரியவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு முறை பேட்டிங் செய்யும் போதும் சிறப்பாக விளையாடி கொண்டே இருக்கிறார்.
ஆனால் கிரிக்கெட்டில் என்றும் ஒரு வீரரால் முடிவினை மாற்றிவிட முடியாது. ஒட்டுமொத்த அணியும் ஒன்றாக விளையாடினால் மட்டுமே வெல்ல முடியும். அதேபோல் காரணமின்றி எந்த வீரரையும் விமர்சிக்க கூடாது. இந்த தலைமுறை வீரர்கள், ரசிகர்கள், இளைஞர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் விராட் கோலி ரோல்-மாடலாக இருக்கிறார். ஃபிட்னஸ், செயல்பாடுகள், கன்சிஸ்டன்சி, சோசியல் மீடியா என்று அத்தனையும் அசத்துகிறார் என்று தெரிவித்துள்ளார்.