பெங்களூர் : 2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் விராட் கோலி 83 ரன்கள் குவித்த போதும் கடும் விமர்சனத்தை சந்தித்தார். மேலும், பெங்களூரு அணியும் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கோலியை நேரடியாக விமர்சித்து இருக்கிறார். விராட் கோலி 59 பந்துகளில் அடித்த ரன்களை, கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் 5.5 ஓவரில் அடித்து விட்டதாகக் கூறி இருக்கிறார்.

இந்தப் போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 59 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 140 ஆக இருந்தது. கடைசி நான்கு ஓவர்களில் கோலி அதிரடி ஆட்டம் ஆடவில்லை என்பது விமர்சனத்துக்கு உள்ளானது. சமூக வலைதளங்களில் சிலர் 140 நல்ல ஸ்ட்ரைக் ரேட் என வாதாடினார். ஆனால், பெங்களூரு மைதானம் சிறியது என்பதால் அங்கே இந்த ஸ்ட்ரைக் ரேட் குறைவானது என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.
பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.5 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. கொல்கத்தா அணியின் சுனில் நரைன் 22 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். முதல் ஓவரில் பில் சால்ட் இரண்டு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து போட்டியை துவக்கியதும் அந்த அணியின் எளிதான வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, "சுனில் நரைன் துவக்க வீரராக இறங்கிய போது என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். "ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது நீ இருக்க வேண்டும்" என்ற மனநிலையில் அவர் சிக்ஸ் அடிக்க முயன்றார். அப்போது அவருக்கு பவுன்சர் மற்றும் யார்க்கர்களை தொடர்ந்து வீசி இருக்க வேண்டும். ஆனால், பெங்களூரு அணியால் முதல் 6 ஓவர்களில் அதை செய்ய முடியவில்லை." என்றார்.
மேலும், "பில் சால்ட் முதல் ஓவரிலேயே 18 ரன்கள் அடித்தார். இதை ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் கோலி 59 பந்துகளில் 83 ரன்கள் அடித்தார். கொல்கத்தா அணி 5.5 ஓவர்களில் எல்லாம் 85 ரன்கள் அடித்து விட்டது." என்று விராட் கோலி குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியதை சுட்டிக் காட்டி விமர்சித்தார் ஆகாஷ் சோப்ரா.