ஆர்சிபி-க்கு எதிரான அரைசதம்.. என் வருங்கால மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன்.. கேகேஆர் வீரர் சர்ப்ரைஸ்!
பெங்களூர் : ஆர்சிபி அணிக்கு எதிராக அடித்த அரைசதத்தை எனது வருங்கால மனைவிக்கு அர்ப்பணிப்பதாக கேகேஆர் அணியின் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கேகேஆர் அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது. அதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்து அசத்தினார். ஐபிஎல் தொடரில் வெங்கடேஷ் ஐயர் அடிக்கும் அரைசதம் இதுவாகும். சிறப்பாக விளையாடிய அவர் 30 பந்துகளில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 50 ரன்களை விளாசினார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனையையும் படைத்தார்.
இந்த போட்டிக்கு பின் வெங்கடேஷ் ஐயர் பேசுகையில், என் வருங்கால மனைவி மைதானத்திற்கு எனது ஆட்டத்தை பார்க்க வந்துள்ளார். அதனால் இந்த அரைசதத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இந்த பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக மாறியது. குறிப்பாக பெவிலியன் அருகில் இருந்த முனையில் இருந்து பேட்டிங் செய்வது நன்றாக உள்ளது. சுனில் நரைனுக்கு தான் நன்றி கூற வேண்டும். ஏனென்றால் பவர் பிளே ஓவர்களிலேயே எங்களுக்கு தேவையான தொடக்கத்தை கொடுத்துவிட்டார்.
அதேபோல் லெக் ஸ்பின்னர் வீசும் போது அவரை நிச்சயம் அட்டாக் செய்ய வேண்டும். அதுதான் என் கடமை. ஆர்சிபி அணியின் விஜய்குமார் சிறப்பாக பவுலிங் செய்தார். வேகம் மற்றும் கட்டர்ஸ் பந்துகளை நன்றாக கட்டுப்படுத்தி பயன்படுத்தினார். அவரை எதிர்கொள்வது கொஞ்சம் கடினமாக இருந்தது. இந்த பிட்சில் வேகம் இல்லை என்றால் பந்தை அடிப்பது கடினம் என்று தெரிவித்துள்ளார்.
வெங்கடேஷ் ஐயருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வெங்கடேஷ் ஐயரின் காதலியான ஷ்ருதி ரகுநாதன் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பி.காம் படித்தவர். அதன்பின் NIFT பல்கலைக்கழகத்தில் ஃபேஷன் டிசைனிங் முடித்த அவர், பெங்களூரில் ஃபேஷன் டிசைனராக பணியாற்றி வருகிறார். வெங்கடேஷ் ஐயரின் பேச்சிற்கு பின் அவர் குறித்த தேடலில் ரசிகர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications