பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய 2024 ஐபிஎல் லீக் போட்டியில் விராட் கோலி சிக்ஸ் அடிப்பதில் இரண்டு முக்கிய சாதனைகளை உடைத்தார்.
2024 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது மூன்றாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. இந்தப் போட்டியில் துவக்க வீரராக இறங்கி அதிரடி ஆட்டம் ஆடிய விராட் கோலி நான்கு சிக்ஸ் அடித்தார்.

மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்த நிலையில் விராட் கோலி 59 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அவர் 4 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார். இதன் மூலம் விராட் கோலி ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக 241 சிக்ஸர்கள் அடித்தார்.
ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் தோனியை பின்தள்ளி நான்காம் இடத்துக்கு முன்னேறினார் விராட் கோலி. தோனி இதுவரை 252 போட்டிகளில் 232 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். அதை முந்திய கோலி 240 போட்டிகளில் 241 சிக்ஸ் அடித்து இருக்கிறார்.
மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய இருவரை முந்தி முதலிடத்தை பிடித்து இருக்கிறார் விராட் கோலி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கிறிஸ் கெயில் 239 சிக்ஸர்களும், டிவில்லியர்ஸ் 238 சிக்ஸர்களும் அடித்துள்ளனர். இது மட்டுமின்றி ஒரே அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.
இந்தப் போட்டியில் விராட் கோலி 83 ரன்கள் குவித்த நிலையில், கிரீன் 33 ரன்களும், மேக்ஸ்வெல் 28 ரன்களும் சேர்த்தனர். தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் 8 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். மற்ற பெங்களூரு அணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. ஆனால், இந்த ஸ்கோர் பெங்களூருவின் சிறிய மைதானத்துக்கு குறைவானது தான்.