பெங்களூர் : 2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் - விராட் கோலி இடையேயான போட்டி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், விராட் கோலி துவக்க வீரராக இறங்கி மிட்செல் ஸ்டார்க் வீசிய இரண்டு ஓவர்களில் ரன் மழை பொழிந்தார்.

இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஃபாப் டுபிலேசிஸ் - விராட் கோலி துவக்கம் அளித்தனர். மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார் விராட் கோலி. அந்த ஓவரில் 7 ரன்கள் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. மிட்செல் ஸ்டார்க் அடுத்து வீசிய போட்டியின் மூன்றாவது ஓவரில் விராட் கோலி ஒரு சிக்ஸ், ஒரு
ஃபோர் அடித்தார். கிரீன் தன் பங்கிற்கு ஒரு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் 17 ரன்கள் சேர்த்தனர்.
இதை வெறும் 2 ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக் கொடுத்து மோசமான நிலையில் இருந்தார் மிட்செல் ஸ்டார்க். இவரைத் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24.75 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கி இருந்தது. அத்தனை தொகை கொடுத்து வாங்கியும் மிட்செல் ஸ்டார்க் கொல்கத்தா அணியின் முதல் போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை என்பது விமர்சனத்துக்கு உள்ளானது. தற்போது விராட் கோலியால் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்து சிக்கி இருக்கிறார் ஸ்டார்க்.