RCB vs LSG : என் இலக்கு அது மட்டுமே.. தூக்கமும், பயிற்சியும் அத்தியாவசியம்.. மயங்க் யாதவ் பேட்டி!
பெங்களூர் : இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற இலக்கினை எட்டுவதற்கான பயணத்தில் இருப்பதாக லக்னோ அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் தெரிவித்துள்ளார்.
2 ஐபிஎல் போட்டிகள் மூலமாக சர்வதேச கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் மயங்க் யாதவ். 21 வயதில் 157 கிமீ வேகத்தில் பவுலிங் செய்யும் மயங்க் யாதவின் பவுலிங் அனைவரையும் ஈர்த்துள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார் மயங்க் யாதவ்.

இந்த போட்டியில் கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் மற்றும் ரஜத் பட்டிதர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 17 டாட் பால்களை உட்ப்ட 3 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஏற்கனவே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதால் மயங்க் யாதவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன்பின் மயங்க் யாதவ் பேசுகையில், 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதை விடவும், லக்னோ அணியின் வெற்றிக்கு பங்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு எதிரான வெற்றியில் எனது பங்களிப்பும் இருந்தது மனதளவில் சந்தோஷமாக உள்ளது. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது தான் இலக்கு. அதற்கான தொடக்கம் தான் இது. இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. இந்த போட்டியை பொறுத்தவரை கேமரூன் க்ரீனின் விக்கெட்டை ரசித்தேன்.
அதேபோல் காயமடையாமல் இருப்பதற்கு, எனது உடலை சரியாக பராமரிக்கிறேன். டயட்டை ஃபாலோ செய்வதோடு, பயிற்சி மற்றும் தூக்கத்தை சரியாக பின் தொடர்கிறேன். எப்போதும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் காயத்தில் இருந்து மீண்டு வர நேரம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் ஐஸ் குளியல் போடுவது அடுத்த சவாலுக்கு தயாராக உதவியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications