பெங்களூரு : 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் எந்த வீரரும் செய்யாத மாபெரும் சாதனை படைத்தார்.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி சார்பில் பங்கேற்றார் விராட் கோலி. இது சின்னசாமி மைதானத்தில் விராட் கோலி ஆடும் நூறாவது டி20 போட்டி ஆகும்.

ஒரே மைதானத்தில் நூறு டி20 போட்டியில் ஆடிய ஒரே வீரர் விராட் கோலி தான் என கூறப்படுகிறது. 2008 முதல் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று இருக்கிறார். அப்போது முதல் சின்னசாமி மைதானமே அந்த அணியின் சொந்த மைதானமாக உள்ளது. அதன் காரணமாக, விராட் கோலி அந்த மைதானத்தில் நூறு போட்டிகளில் ஆடி இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி நீண்ட காலமாக இடம் பெற்ற போதும் இடையே இரண்டு ஆண்டுகள் சிஎஸ்கே அணி தடை செய்யப்பட்ட போது அவர் ரைஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். மேலும், சிஎஸ்கே அணி சில போட்டிகளை புனே மைதானத்தில் ஆடி இருக்கிறது. எனவே, தோனியால் இந்த சாதனையை செய்ய முடியவில்லை. அவர் சிஎஸ்கே அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் கோலியை விட மிகக் குறைந்த போட்டிகளில் தான் ஆடி இருக்கிறார்.
விராட் கோலிக்கு அடுத்து ரோஹித் சர்மா ஒரே மைதானத்தில் அதிக போட்டிகளை ஆடி இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் ரோஹித் சர்மா, மும்பை வான்கடே மைதானத்தில் இதுவரை 80 டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார். சின்னசாமி மைதானத்தில் 100 டி20 போட்டிகளில் ஆடி உள்ள விராட் கோலி 3298 ரன்கள் குவித்துள்ளார்.