பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகளிகு இடையிலான ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணி வீரர் யாஷ் தயாள் குறித்து மோசமான வார்த்தை ஒன்றை பேசினார் வர்ணனையாளர் முரளி கார்த்திக். அதைக் கேட்ட ரசிகர்கள் கொதித்துப் போய் உள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2024 ஐபிஎல் ஏலத்தில் வேகப் பந்துவீச்சாளர் யாஷ் தயாளை வாங்கி இருந்தது. அவர் முந்தைய ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். அந்த அணியில் அவர் மோசமான பந்துவீச்சாளராக இருந்தார். ஒவ்வொரு போட்டியிலும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார்.

2023 ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்ஸ் அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற வைத்ததும் யாஷ் தயாள் ஓவரில் தான் நடந்தது. அதனாலேயே அவரை விடுவித்து இருந்தது குஜராத் அணி. ஆனால், அவரை ஏலத்தில் வாங்கி இருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிறப்பாக பந்து வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்தப் போட்டி நடந்த பெங்களூரு சின்னசாமி மைதானம் இந்தியாவிலேயே சிறிய பவுண்டரி எல்லையை கொண்ட மைதானம், இங்கே எளிதாக பவுண்டரி அடிக்கலாம். ஆனால், இந்த மைதானத்தில் பந்து வீசிய யாஷ் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த நிலையில் யாஷ் அந்த அணியிலேயே சிக்கனமாக பந்து வீசி இருந்தார்.
இது குறித்து வர்ணனையின் போது குறிப்பிட்ட முன்னாள் வீரர் முரளி கார்த்திக், "ஒருவரின் (குஜராத் டைட்டன்ஸ்) குப்பை மற்றொருவரின் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) சொத்தாக மாறி இருக்கிறது" என்றார். முரளி கார்த்திக் உதாரணம் சொல்ல வந்தாலும் அதை சரியான வார்த்தைகளில் சொல்லாமல் யாஷ் தயாளை அவமரியாதையாக குறிப்பிடும் வகையில் கூறினார். இதைக் கேட்ட ரசிகர்கள் கொதித்துப் போய் அவரை வர்ணனையாளர் பணியில் இருந்து நீக்குமாறு கூறி வருகின்றனர்.