பெங்களூர் : விராட் கோலி பேட்டிங் செய்யும் போது ஃபீல்டிங் செய்யும் அணி செய்யக் கூடாத தவறு ஒன்றை பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஜானி பேர்ஸ்டோ செய்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி கொடுத்த எளிதான கேட்ச் ஒன்றை தவற விட்டார் பேர்ஸ்டோ. அதுவும் விராட் கோலி சந்தித்த இரண்டாவது பந்து அது.
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவான் துவக்க வீரராக இறங்கி 45 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வந்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ சேஸிங் செய்தது. துவக்க வீரராக டு பிளேசிஸ் உடன் களமிறங்கினார் விராட் கோலி. அவரே சாம் கர்ரன் வீசிய முதல் ஓவரை சந்தித்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் ரன் எடுக்காத நிலையில் இரண்டாவது பந்து எட்ஜ் ஆகி ஸ்லிப் திசையில் நின்று இருந்த பேர்ஸ்டோ கைகளுக்கு சென்றது. ஆனால், அவர் பந்தை நழுவ விட்டார். அத்துடன் பந்து பவுண்டரிக்கும் சென்றது.
எப்போதுமே கோலி கொடுத்த கேட்ச்சை நழுவ விட்டால் அவர் அதிக ரன் குவிப்பார். இந்தப் போட்டியிலும் அதுதான் நடந்தது. விராட் கோலி 49 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். 11 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து பஞ்சாப் அணியை கதிகலங்க வைத்தார். விராட் கோலியை தவிர முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட 20 ரன்களை தாண்டவில்லை. ஒருவேளை கோலி கொடுத்த கேட்ச்சை பிடித்திருந்தால் பஞ்சாப் அணி இந்தப் போட்டியில் எளிதாக வென்று இருக்க முடியும்.
விராட் கோலி 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், லோம்ரார், தினேஷ் கார்த்திக் கடைசி 2 ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடி பெங்களூரு அணியை வெற்றி பெறச் செய்தனர். தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். தோல்விக்கு பின் பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் கோலி கேட்ச்சை நழுவ விட்டது தான் தோல்விக்கு காரணம் என்றார்.