அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று மிகவும் முக்கியம் வாய்ந்த நாக் அவுட் போட்டி நடைபெறுகிறது. ப்ளே ஆஃப் சுற்றில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் பலம் வாய்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது இந்த ஆட்டத்திற்கு ஏற்கனவே சென்னை, குஜராத் அணிகள் மோதிய போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் தான் இன்றைய ஆட்டத்திற்கு அமைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த பிட்சில் குஜராத் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 231 எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ரன் குவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் சிஎஸ்கே அணி கடந்த 68-வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியிடம் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியது. அப்போது சிஎஸ்கே ரசிகர்களை அவமதிக்கும் விதமாக ஆர்சிபி ரசிகர்கள் நடந்து கொண்டார்கள்.
மேலும் சிஎஸ்கே வீரர்களையும் வெறுப்பேற்றும் வகையில் ஆர்சிபி ரசிகர்கள் பல அடாவடி செயல்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும் தமிழக வீரருமான அஸ்வின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். என்னதான் அஸ்வின் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினாலும் அவருடைய நாடி நரம்பு ரத்தம் எல்லாம் தமிழ் குருதி தான் ஓடும்.
மேலும் தமிழக ரசிகர்களை அவமதிக்கும் வகையில் ஆர்சிபி செய்ததற்கு நிச்சயம் இன்று அஸ்வின் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பழி வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின் பவுலிங் மட்டுமல்லாமல் பேட்டிங் மற்றும் யுக்திகளை அமைப்பதில் வல்லவராக திகழ்கிறார்.
இதனால் சிஎஸ்கே போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி, டுபிளசிஸ், ரஜத் பட்டிதார் போன்ற வீரர்களுக்கு அஸ்வின் தனித்திட்டத்தை வகுத்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே ரசிகர்களை அவமதித்ததால் தனி ஆளாக நின்று அஸ்வின் இன்று ஆர்சிபி ரசிகர்களுக்கு பதிலடி கொடுப்பார் என தமிழக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.