மும்பை : இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோருடன் கவுதம் கம்பீர் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. இதன்பின் ராகுல் டிராவிட் பதவியில் தொடர விரும்பாததால், அடுத்த பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ இறங்கியது. குறிப்பாக ஐசிசி கோப்பையை வெல்ல கூடிய பயிற்சியாளரை இந்திய அணி நிர்வாகம் தேடி வருகிறது.

அந்த வகையில் பிசிசிஐ தரப்பில் கவுதம் கம்பீர், சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங், விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது. பயிற்சியாளருக்கான ரேஸில் கவுதம் கம்பீர் முன்னணியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பீரின் செயல்பாடுகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அதேபோல் அரசியலில் இருந்து கவுதம் கம்பீர் விலகியதும் பயிற்சியாளர் பொறுப்புக்கு வருவதற்காக தான் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுடன் கம்பீர் ஆலோசித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் கடந்த சில மாதங்களாக இந்திய அணி வீரர்களின் செயல்பாடுகளில் கம்பீர் சர்ச்சைக்குரிய வகையில் எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை.
விராட் கோலியுடன் நட்பு பாராட்டி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பயிற்சியாளர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே கவுதம் கம்பீர் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட சீனியர் வீரர்களுடன் தொடர்பில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
பயிற்சியாளர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே எந்த வீரருடனானவது கருத்து வேறுபாடுகள் இருந்தால், அதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கவுதம் கம்பீர் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிசிசிஐ தரப்பில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் கவுதம் கம்பீர் என்று முடிவெடுத்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.