மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டி ஒன்றில் கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி விராட் கோலியின் அபார சதத்தால் மூன்று விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதில் ஜாஸ் பட்லர் 58 பந்துகளில் சதம் அடித்தார். இந்த நிலையில் இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு ராஜஸ்தான் அணி வீரர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பிங்க் நிற ஜெர்சியை அணிந்து இந்த போட்டியில் பங்கேற்றனர். பெண்கள் விளையாட்டு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறுவதை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
டாசின்போது பெண் ஒருவரை அழைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக சூரிய சக்தியால் இயங்கக்கூடிய மின் விளக்கை ஆர்சிபி அணி கேப்டன் பரிசாக கொடுத்தனர். இந்த நிகழ்வில் பேசிய கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர், சரி இது எல்லாம் போகட்டும் நாம் இப்போது தீவிரமான முக்கிய விஷயத்திற்கு வருவோம் என்று கேப்டன்களை டாஸ் வீச அழைத்தார். இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அவர்களை அழைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஊக்கம் கொடுத்த நிலையில் அதனை கேலி செய்யும் விதமாக நாம் தீவிரமான விஷயத்திற்கு வருவோம் என்று அவர் பேசி இருப்பது ரசிகர்களுடைய கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அப்போது பெண்கள் பங்கு பெறும் போட்டிகள் மற்றும் பெண்களின் பங்கீடு எதுவுமே முக்கியமானது இல்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பெண்களை கேவலப்படுத்தும் விதமாக சஞ்சய் மஞ்சுரேக்கர் பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து வர்ணனை செய்வதை பிசிசிஐ தடை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது வான்கடே மைதானத்தில் பேசிய சஞ்சய் மஞ்சுரேக்கர், ஹர்திக்கிற்கு மரியாதை கொடுக்கும் விதமாக ரசிகர்கள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது பேசுபொருளாக மாறிய நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சையில் அவர் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.