ஜெய்ப்பூர் : 17 ஆண்டுகளாக ஆர்சிபி அணியில் விராட் கோலி மட்டுமே விளையாடி வருவதாகவும், அந்த அணியை கலைத்துவிடலாம் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார்.
16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல முடியாமல் இருக்கும் முன்னணி அணி என்றால் அது ஆர்சிபி தான். டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்கு பெரியளவில் ரசிகர்கள் இல்லாததால், அந்த அணிகள் மீதான விமர்சனங்கள் குறைவாகவே இருக்கும். இந்த சீசனிலாவது ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதுவரை ஆர்சிபி அணி விளையாடியுள்ள 5 போட்டிகளில் 4 தோல்வி, ஒரு வெற்றி என்று 2 புள்ளிகளுடன் தவித்து வருகிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் விளாசிய போதும், மற்ற வீரர்களின் ஆதரவு இல்லாததால் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அதேபோல் பவுலிங்கிலும் அதிக ரன்களை பவுலர்கள் விட்டுக் கொடுக்க, 19.1 ஓவர்களில் ராஜஸ்தான் அணி எளிதாக வெற்றிபெற்றது. இதனால் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். இந்த முறையும் ஆர்சிபி அணி கோப்பையை வெல்வது எளிதாக இருக்காது. இதுகுறித்து முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசுகையில், ஆர்சிபி அணியை பற்றி பேசுவதே பயனற்ற ஒன்றாக நினைக்கிறேன்.
அவர்களை பற்றி சொல்வதற்கும் என்னிடம் ஒன்றும் கிடையாது. விக்கெட்டுகள் வீழ்த்தும் பவுலர்கள் கூட கிடையாது. விராட் கோலி மட்டுமே ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். ஒரு வீரராக விராட் கோலி வேறு என்ன செய்ய முடியும்? 17 ஆண்டுகளாக ஆர்சிபி அணியின் கதை ஒன்று தான். அதற்கு விடையே கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
இந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 316 ரன்களை விளாசி இருக்கிறார். இவருக்கு பின் ஆர்சிபி அணிக்காக விளையாடிய வீரர்களில் அதிகபட்சமாக டூ பிளசிஸ் மட்டும் 5 போட்டிகளில் விளையாடி 109 ரன்களை சேர்த்துள்ளார். இதன் மூலமாகவே ஆர்சிபி அணியின் பேட்டிங் தரத்தை அறிய முடியும்.