அகமதாபாத் : சிஎஸ்கே அணிக்கு எதிரான வெற்றியை ஆர்சிபி அணி வீரர்கள் அனைவரும் அதிகாலை 5 மணி வரை கொண்டாடியது தெரிய வந்துள்ளது.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. முதல் 8 போட்டிகளில் ஆர்சிபி அணி 7 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், அடுத்த 6 போட்டியில் அனைத்திலும் வென்று 14 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.

இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. வழக்கமாக ஆர்சிபி அணி முக்கியமான போட்டிகளில் தோல்வியடைந்து வந்த நிலையில், 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணியை வீழ்த்தியது அந்த அணி ரசிகர்களை உற்சாகமாக்கியது. இதனால் ரசிகர்கள் பலரும் மைதானத்தில் வெளியில் சிஎஸ்கே அணி ரசிகர்களிடம் எல்லை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் சிஎஸ்கே அணி வீரர்களுக்கான பேருந்து முன் நின்று கோஷமிட்டதோடு, விராட் கோலியின் ஜெர்சியையும் காட்டி அடாவடியாக கொண்டாடினர். இதனால் கோபமடைந்த சிஎஸ்கே அணி ரசிகர்கள், பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றதற்கே இவ்வளவு கொண்டாட்டமா.. முடிந்தா முதல் கோப்பையை வெல்லுங்கள் என்று பதிலடி கொடுத்தனர்.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு சமமாக ஆர்சிபி அணி வீரர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. யாஷ் தயாளின் தாயார் பேசுகையில், யாஷ் தயாள் கடைசி ஓவரை வீசி ஆர்சிபி அணியை வெற்றிபெற வைத்து மகிழ்ச்சியை அளிக்கிறது. தோனி, ஜடேஜாவுக்கு எதிரான பவுலிங் செய்து ரன்களை கட்டுப்படுத்தியதை நினைத்து பெருமையாக உள்ளது. அதிகாலை 5 மணி வரை ஆர்சிபி வீரர்கள் கொண்டாடியதாக யாஷ் தயாள் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இது சிஎஸ்கே அணி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற போதும் கூட சிஎஸ்கே அணி வீரர்கள் இப்படியான கொண்டாட்டத்தில் ஈடுபட்டதில்லை. ஆனால் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றதை விடிய விடிய கொண்டாடுவது சிறுபிள்ளைத்தனம் என்று விமர்சித்து வருகின்றனர்.