அகமதாபாத் : ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டிகளில் விராட் கோலியின் செயல்பாடுகள் ஆர்சிபி அணி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. லீக் சுற்றில் 8 போட்டிகளில் 1ல் மட்டுமே வென்ற ஆர்சிபி, அடுத்ததாக விளையாடிய 6 போட்டிகளில் அனைத்திலும் வென்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. ஐபிஎல் தொடரிலேயே மகத்தான கம்பேக்காக ஆர்சிபி அணியின் ஆட்டம் அமைந்துள்ளது.

இதற்கு முதன்மை காரணமாக நட்சத்திர வீரர் விராட் கோலி இருக்கிறார். ஏனென்றால் இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி, ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 708 ரன்களை குவித்துள்ளார். அதிக ரன்களை விளாசிய வீரர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் விராட் கோலி, ஆரஞ்சு கேப்பையும் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆர்சிபி அணி இதுவரை 4 முறை எலிமினேட்டர் போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த 4 போட்டிகளிலும் விராட் கோலி பேட்டிங்கில் சொதப்பியுள்ளது தெரிய வந்துள்ளது. 2015ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்களும், 2020ஆம் ஆண்டு ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்களும், 2021ஆம் ஆண்டு கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 39 ரன்களும் சேர்த்துள்ளார்.
அதேபோல் 2022ஆம் ஆண்டு லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்துள்ளார். விராட் கோலியின் பவர் பிளே ஆட்டமே ஆர்சிபி அணிக்கு சாதகமாக அமைந்து வரும் சூழலில், விராட் கோலியை கட்டுப்படுத்துவதே ராஜஸ்தான் அணியின் முதன்மை குறிக்கோளாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
எலிமினேட்டர் போட்டியில் விராட் கோலிக்கு இப்படியொரு கண்டம் இருப்பது ஆர்சிபி அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விராட் கோலியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விராட் கோலியை கட்டுப்படுத்த போல்ட் மற்றும் பர்கர் ஆகிய 2 இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுடன் ராஜஸ்தான் அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.