ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் விளாசி அசத்தினாலும், அவரின் ஸ்ட்ரைக் ரேட் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
ராஜஸ்தான அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதன்பின் ஆர்சிபி அணி தரப்பில் விராட் கோலி - டூ பிளசிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஜெய்ப்பூர் மைதானத்தில் விராட் கோலி இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்காததால், அவரது ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து 2வது ஓவரிலேயே பவுண்டரி அடித்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி, அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி என்று விளாச தொடங்கினார். பவர் பிளே ஓவர்களில் 25 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 32 ரன்கள் சேர்த்த நிலையில், 39 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இந்த சீசனில் விராட் கோலி அடிக்கும் 3வது அரைசதம் இது.
இதன் மூலமாக ஆர்சிபி அணி 12 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் டூ பிளசிஸ் 44 ரன்களிலும், மேக்ஸ்வெல் 1 ரன்னிலும், சவுரவ் செளஹான் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஆர்சிபி அணியின் ஸ்கோர் ராஜஸ்தான் பவுலர்களால் கட்டுப்படுத்தப்பட்டது. மறுமுனையில் அரைசதம் கடந்த விராட் கோலியால் பெரியளவில் பவுண்டரி அடிக்க முடியவில்லை.
அவ்வப்போது ஒரு பவுண்டரியும், ஒரு சிக்சரும் விளாசி வந்தார். 18வது ஓவரின் போது விராட் கோலி 98 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 19வது ஓவரில் 2 ரன்களை சேர்த்து தனது 8வது சதத்தை விளாசினார். இருப்பினும் அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. 67 பந்துகளில் விராட் கோலி சதத்தை எட்டிய நிலையில், ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்தது. நன்றாக விளையாடிய விராட் கோலி 72 பந்துகளில் 4 சிக்ஸ், 12 பவுண்டரி உட்பட 113 ரன்களை சேர்த்தார்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 156.94 என்பது தான். டி20 கிரிக்கெட்டில் ஆங்கர் ரோல் என்பதே தேவையில்லை என்று பார்க்கப்பட்டு வரும் நிலையில், 20 ஓவர்களில் ஆங்கர் ரோலில் விளையாடி இருக்கிறார். அரைசதம் கடந்த பின்னரும் விராட் கோலி ஓவருக்கு சில சிக்சர்களை விளாச முயற்சிக்காமல், ரன்களை ஓடி எடுப்பதிலேயே கவனம் செலுத்தினார்.
நேற்றைய ஆட்டத்தில் அபிஷேக் சர்மா பவர் பிளேவில் மட்டும் 12 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி 25 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று ரசிகர்களிடையே காட்டமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.