ஜெய்ப்பூர் : சிஎஸ்கே அணி பாணியில் ஸ்பின்னர்களை பொளக்க சிவம் துபேவை போல் ஆர்சிபி அணியும் இளம் வீரரான சவுரவ் செளஹானை அறிமுகம் செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். ஆர்சிபி அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் சூழலில், இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியுள்ளது.

டாஸின் போது ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளசிஸ் பேசுகையில், பேட்டிங் ஆர்டரில் ஒரு மாற்றத்தை செய்துள்ளோம். இந்த போட்டியில் ஒவ்வொரு வீரருக்கு என்ன ரோல் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம். அனுஜ் ராவத் நீக்கப்பட்டு புதிய வீரரான சவுரவ் செளஹான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அவரை பெரியளவில் யாருக்கும் தெரியாது. அவரிடம் நல்ல பவர் ஹிட்டிங் திறமையுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணியில் புதிய வீரர்கள் அறிமுகம் செய்யப்படுவதே சாதாரணம் என்றாலும், விராட் கோலி, டூ பிளசிஸ், மேக்ஸ்வெல் இருக்கும் பேட்டிங் லைன் அப்பில் புதிய வீரர் இடம்பெறுவது எளிதல்ல. அதுமட்டுமல்லாமல் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே டூ பிளசிஸ் பெரியளவில் யாருக்கும் இப்படி பில்டப் கொடுத்ததில்லை.
23 வயதாகும் சவுரவ் செளஹான் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இடதுகை பேட்ஸ்மேனான சவுரவ் செளஹான், விஜய் ஹசாரே தொடரில் ஒரு சதம் மற்றும் அரைசதம் அடித்துள்ளார். அதேபோல் ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் இடதுகை ஸ்பின்னரான ஆகாஷ் பாண்டேவின் பவுலிங்கில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை விளாசி அசத்தியிருந்தார்.
கிட்டத்தட்ட சிவம் துபேவை போல் ஸ்பின்னர்களை பொளந்து கட்ட கூடிய பேட்ஸ்மேன். ராஜஸ்தான் அணியில் அஸ்வின் மற்றும் சாஹல் இரு நட்சத்திர ஸ்பின்னர்கள் இருப்பதால், அவர்களுக்கு எதிராக பேட்டிங் செய்து ரன்களை குவிக்க சவுரவ் செளஹான் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.