இதுதாண்டா செஞ்சுரி.. 39 பந்தில் 8 சிக்ஸ், 9 ஃபோர்.. ஆர்சிபி அணியை கதற விட்ட உலகக்கோப்பை நாயகன்
பெங்களூர் : 2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டியில் ட்ராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதம் அடித்து தெறிக்க விட்டார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு அபிஷேக் சர்மா - ட்ராவிஸ் ஹெட் துவக்கம் அளித்தனர். அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் ட்ராவிஸ் ஹெட் சிறிய பவுண்டரி எல்லைகளை கொண்ட சின்னசாமி மைதானத்தில் தனது திறமையை காட்டி சிக்ஸர் மழை பொழிந்தார். 39 பந்துகளில் சதம் கடந்தார் அவர். 9 ஃபோர், 8 சிக்ஸ் அடித்த அவர் சதன் கடந்த பின் 41 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த போது ஹைதராபாத் அணி 12.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து இருந்தது. இந்த வெறியாட்டம் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கனவை உடைத்து எறிந்தார் ட்ராவிஸ் ஹெட். ஐபிஎல் வரலாற்றிலேயே இது நான்காவது அதிவேக சதம் ஆகும்.
ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதம் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து யூசுப் பதான் 37 பந்துகளிலும், டேவிட் மில்லர் 38 பந்துகளிலும் சதம் அடித்து இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர். ட்ராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதம் அடித்து இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் ட்ராவிஸ் ஹெட் ஆட்டமிழந்த பின் கிளாசன் அதிரடி ஆட்டம் ஆடினார். 15 ஓவர்களில் எல்லாம் ஹைதராபாத் அணி 200 ரன்களை கடந்தது. அடுத்து கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். ஐடன் மார்கிரம் 17 பந்துகளில் 32 ரன்களும், அப்துல் சமத் 10 பந்துகளில் 37 ரன்களும் சேர்த்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. இதுவே ஐபிஎல் தொடரில் மிக அதிக ஸ்கோர் ஆகும்.


Click it and Unblock the Notifications