டெல்லி : 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி படுமோசமாக ஆடி வருகிறது. இதுவரை ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து இருக்கிறது. கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 234 ரன்கள் விட்டுக் கொடுத்த டெல்லி அணி, சேஸிங்கில் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் பந்துவீச்சின் போது ரிஷப் பண்ட் ஃபீல்டிங் நிறுத்துவதில் செய்த தவறுகளை பார்த்து பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தார். பல முறை ரிஷப் பண்ட் சொதப்பிய போதெல்லாம் அதிருப்தியாக முகத்தை வைத்து இருந்தார்.

மறுபுறம் டெல்லி அணி பேட்டிங்கில் சொதப்பிக் கொண்டு இருந்த போது வீரர்கள் அறையில் ரிஷப் பண்ட் வெறுப்பை காட்டிக் கொண்டு இருந்தார். இதன் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணியில் புகைச்சல் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக டெல்லி அணியின் அணித் தேர்வில் பெரிய குழப்பம் உள்ளது. எந்தெந்த வீரர்களை களமிறக்கலாம் என்ற முடிவுகளை பெரும்பாலும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கே முடிவு செய்வதாக தெரிகிறது. ஆனால், இடையே அந்த அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி தன் பங்கிற்கு சில இளம் வீரர்களை களமிறக்கி விடுவதாகவும் ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.
டெல்லி அணி வெற்றிக்கான 11 வீரர்களை தேர்வு செய்வதைக் காட்டிலும் ஆஸ்திரேலியரான ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஜை ரிச்சர்ட்சன் ஆகியோரை அணியில் ஆட வைப்பதிலும், அவர்களே அணியில் முதன்மையாக இருக்க வேண்டும் எனவும் நினைக்கிறார். சில சமயம் கேப்டன் ரிஷப் பண்ட்டை முந்திக் கொண்டு டேவிட் வார்னர் ஃபீல்டிங் நிறுத்துகிறார்.
அதே போல, சவுரவ் கங்குலி இளம் வீரர்களுக்கு, புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். அது நல்ல விஷயம் தான். ஆனால், அது அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். ஒரு நேரத்தில் இரண்டு அல்லது மூன்று புதிய வீரர்களை அணியில் சேர்த்து அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நினைப்பது சரியான முடிவாக அமையவில்லை.
உதாரணத்துக்கு அபிஷேக் போரல் என்ற வீரரை அறிமுகம் செய்தது டெல்லி அணி. அவர் ஒரு போட்டியில் அதிரடி ஆட்டத்தால் கடைசி ஓவர்களில் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதே வீரரை மும்பை அணிக்கு எதிராக 235 ரன்களை சேஸிங் செய்த போது மூன்றாம் வரிசையில் இறக்கியது டெல்லி அணி. ஆனால், அவரால் 31 பந்துகளில் 41 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. உண்மையில் அவர் சிறப்பாக ஆடினார். ஆனால், அதிரடி ஆட்டம் ஆட முடியாமல் திணறினார்.
இதே போட்டியில் குமார் குஷாக்ரா அறிமுகம் செய்யப்பட்டார். மிட்செல் மார்ஷ் காயத்தில் இருப்பதால் இந்த இளம் வீரருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அனுபவம் வாய்ந்த வீரரான மிட்செல் மார்ஷ்-க்கு மாற்றாக குமார் குஷாக்ராவை களமிறக்கும் முடிவு தவறாக அமைந்தது. டெல்லி அணியில் வேறு அனுபவ வீரர்களும் இல்லை.
அதற்கு காரணம், 2024 ஐபிஎல் ஏலத்தின் போது கங்குலி சில இளம் வீரர்களை வாங்க ஆர்வம் காட்டினார். அதில் குமார் குஷாக்ராவை வாங்க மட்டும் 7 கோடி செலவிடப்பட்டது. ஆனால், அவருக்கு வாய்ப்பு கொடுத்து வளர்க்கும் நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி இல்லை என்பதே உண்மை.
இப்படி கங்குலி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்க, ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என நினைக்க, ரிஷப் பண்ட் பந்துவீச்சாளர்களை மாற்றுவது, ஃபீல்டிங் நிறுத்துவது போன்றவற்றில் சொதப்ப டெல்லி கேபிடல்ஸ் அணி பெரும் சரிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. இந்த காரணத்தாலேயே அந்த அணியில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அந்த அணி ஐந்து போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.