சென்னை : இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி தேடி வந்த போதும், அதனை ஏற்க மறுத்துவிட்டதாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ தீவிரமாக உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பிசிசிஐ தரப்பிலும் சில முக்கிய ஜாம்பவான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் பணியாற்றும் பயிற்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

அந்த வகையில் டெல்லி அணிக்காக 6 ஆண்டுகளுக்கும் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், ஐபிஎல் தொடரின் போது நேருக்கு நேராக சிலருடன் சிறிய பேச்சுவார்த்தை செய்யப்பட்டது. சாதாரணமாக நான் ஆர்வமாக இருக்கிறேனா என்ற அளவில் தான் அந்த பேச்சுவார்த்தை இருந்தது. அதேபோல் சீனியர் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்.
ஆனால் எனக்கு இன்னும் சில பணிகள் உள்ளன. வீட்டில் உள்ள குடும்பத்தினருடன் நேரம் செலவிட விரும்புகிறேன். அதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டால், ஐபிஎல் தொடரில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்காது. இது அனைவருக்கும் தெரியும். அதேபோல் தேசிய அணியின் பயிற்சியாளராக 10 முதல் 11 மாதங்கள் வீரர்களுடன் இருக்க வேண்டும். எனது வாழ்க்கை முறைக்கு இப்போது அது சரி வராது என்று நினைக்கிறேன்.
ஐபிஎல் தொடரின் போது எனது மனைவி மற்றும் மகன் 5 வாரங்களும் என்னுடன் இருந்தனர். இந்தியாவில் இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணியின் கலாச்சாரமும் அவர்களுக்கு பிடித்துள்ளது. இப்போதைய சூழலில் முழு நேரம் பணியாற்றும் நிலையில் இல்லை. இதுதொடர்பாக என் மகனிடம் கூறினேன். உடனடியாக அவர், ஏற்றுக்கொள்ளுங்கள் அப்பா.. அடுத்த 2 ஆண்டுகள் இந்தியாவில் இருப்பது ஜாலியாக இருக்கும் என்று கூறியதாக தெரிவித்தார்.