லக்னோ : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் ஆணி ஆடிய போது அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தான் ரிவ்யூ கேட்காமல் அம்பயர் ரிவ்யூ செய்ததாக கூறி அவர் வாக்குவாதம் செய்தார். ஆனால், ரிஷப் பண்ட் ரிவ்யூ கேட்டு சைகை செய்தது மறு ஒளிபரப்பில் தெளிவாக காட்டப்பட்டது. இதை அடுத்து ரிஷப் பண்ட் தவறு செய்து விட்டு அதை அம்பயர் மீது பழி போடுவதாக பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்தப் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. போட்டியின் நான்காவது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். அப்போது ஒரு பந்துக்கு அம்பயர் வைடு என சைகை அளித்தார். தற்போது உள்ள ஐபிஎல் விதிப்படி வைடு பந்துகளையும் ரிவ்யூ கேட்க முடியும்.
ரிஷப் பண்ட் அம்பயர் வைடு என கூறியவுடன் ரிவ்யூ கேட்க "T" என்பது போல கைகளை வைத்து சைகை செய்தார். அது தான் ரிவ்யூ கேட்க காட்டப்படும் சைகை. ரிஷப் பண்ட் சைகை செய்ததை அடுத்து அம்பயர் ரிவ்யூ செய்யுமாறு மூன்றாவது அம்பயருக்கு தகவல் கொடுத்தார். அப்போது அது வைடு தான் என மீண்டும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
ஆனால், திடீரென கோபம் கொண்ட ரிஷப் பண்ட் அம்பயரிடம் சென்று தான் ரிவ்யூ கேட்கவே இல்லை என வாக்குவாதம் செய்தார். அதனால், ரிஷப் பண்ட் ரிவ்யூ கேட்டாரா? இல்லையா? என்ற குழப்பம் எழுந்தது. இதை அடுத்து அவர் ரிவ்யூ கேட்ட காட்சி மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதைக் கண்ட ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் அவரை காய்ச்சி எடுத்து வருகின்றனர்.
அனேகமாக ரிஷப் பண்ட் இது வைடு தானா? என பந்துவீச்சாளர் அல்லது ஃபீல்டரிடம் கேட்டு இருக்கிறார். அதை வாய் மொழியாக கேட்காமல் கைகளால் ரிவ்யூ கேட்கலாமா? என "T" போன்ற சைகை செய்து கேட்டு இருக்கிறார். ஆனால், அப்படி செய்கை செய்தாலே அது அம்பயரிடம் ரிவ்யூ கேட்பதாகவே பொருள் என்பதால் அவர் ரிவ்யூ செய்தார்.
ஒரு கேப்டன் இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் செயல்படுவதா? என ரசிகர்கள் ரிஷப் பண்ட்டை வறுத்து எடுத்தனர். மேலும், ரிஷப் பண்ட் செய்த இந்த தவறால் டெல்லி அணி ஒரு ரிவ்யூவை இழந்தது. எனினும், இந்தப் போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.