எனக்கா அணியில் இடமில்லை? பொங்கி எழுந்த இளம் வீரர்.. பெரிய சிக்கலில் பிசிசிஐ.. என்ன நடந்தது?
மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக மாறி இருக்கிறார் ரியான் பராக். அதன் காரணமாக அவரை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் துவங்கி உள்ளன. இதை அடுத்து பிசிசிஐ தேர்வுக் குழு கடும் அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
கடந்த 2023 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக பேட்டிங் செய்து இருந்தார் ரியான் பராக். விரைவில் இந்திய அணியில் நிரந்தர இடம் பெற வேண்டும் என்ற அவரது கனவுகள் தவிடுபொடியானது. அதன் பின் கடும் பயிற்சி செய்து 2023 சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் அசாம் மாநில அணியில் இடம் பெற்று தொடர்ந்து ஏழு அரைசதம் விளாசி டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார் ரியான் பராக்.

அப்போதே அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால், அவரை பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதோ ஒரு சவாலாக எடுத்துக் கொண்ட ரியான் பராக், 2024 ஐபிஎல் தொடரில் அதே உச்சகட்ட ஃபார்மில் ஐந்து போட்டிகளில் ஆடி 261 ரன்கள் குவித்துள்ளார். மூன்று அரைசதங்கள் அடித்து இருக்கிறார். இரண்டு முறை நாட் அவுட்டாக கடைசி வரை நின்று அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அவரது சராசரி 87 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 158 ஆக உள்ளது.
2023 ஐபிஎல் தொடரில் ஏழு போட்டிகளில் ஆடி வெறும் 78 ரன்கள் எடுத்த ரியான் பராக். தற்போது பெரிய மாற்றத்தை அடைந்து இருக்கிறார். இதை அடுத்து ரியான் பராக்கை 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே, இந்திய டி20 அணியில் வாய்ப்பை எதிர்பார்த்து சுமார் 20 வீரர்கள் இருக்கும் நிலையில் ரியான் பராக்கும் அந்த வரிசையில் இடம் பெற்று இருக்கிறார். இதன் காரணமாக ரியான் பராக், பிசிசிஐ-க்கு பெரிய தலைவலியாக மாறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications