மும்பை : ரோஹித் சர்மா, ஆகாஷ் அம்பானியுடன் காரில் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் பிளவு இருப்பதாக கூறப்படும் நிலையில், முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுடன், அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி ஒரே காரில் சென்றது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பி, பல்வேறு ஊகங்களை கிளப்பி வருகின்றனர்.
2024 ஐபிஎல் தொடருக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி ரோஹித் சர்மாவிடம் இருந்து பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா மீதும், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் மீதும் அதிருப்தியில் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்தது.

இதற்கிடையே தற்போது நடந்து வரும் ஐபிஎல் லீக் சுற்றில் ரோஹித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார். 2025 ஐபிஎல் தொடரில் நிச்சயம் அவர் அணி மாறி விடுவார் என செய்திகள் இறக்கை கட்டி பறக்கின்றன. சமீபத்தில் கூட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ரோஹித் சர்மாவை தங்கள் அணிக்கு வரவழைப்பது குறித்து பேசி இருந்தார்.
அதே போல 2025 ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாகவே ரோஹித் சர்மாவை தங்கள் அணியில் சேர்க்க டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலியும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், 2024 ஐபிஎல் தொடருக்கு பின் அணி மாற்றம் செய்ய முடியுமா? என்பது தெளிவாக தெரியவில்லை. 2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடக்க உள்ளதால் அனைத்து அணிகளும் நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு பிற வீரர்களை ஏலத்தில் தான் தேர்வு செய்ய வேண்டும்.
இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை வேறு அணிக்கு அனுப்ப விரும்பவில்லை என கூறப்படுகிறது. அவருடன் சமாதானம் பேசவே ஆகாஷ் அம்பானி அவருடன் ஒரே காரில் பயணித்து இருக்கக் கூடும் என கூறப்படுகிறது. ஆனால், ரோஹித் சர்மா ரசிகர்கள் ஒருபடி மேலே போய், 2024 ஐபிஎல் தொடரின் பின் பகுதியில் ரோஹித் சர்மா மீண்டும் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறி வருகின்றனர்.