IPL 2024 : 63 வயது சிஎஸ்கே ரசிகர் மண்டையை உடைத்து கொன்ற மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்
மும்பை : மகாராஷ்டிராவில் உள்ள ஹன்மந்த்வாடி என்ற சிறிய கிராமத்தில் 63 வயதான சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் பந்தோபந்த் பாபுசோ திபிலே என்பவர், ரோஹித் சர்மா
ஆட்டமிழந்தது குறித்து பேசியதால் அங்கிருந்த இரண்டு மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அவரது தலையில் தாக்கினர். தாக்குதலுக்கு உள்ளான சிஎஸ்கே ரசிகர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில், தற்போது அவர் இறந்து விட்டார்.
இந்த சம்பவம் ஹன்மந்த்வாடியில் புதன்கிழமை (27ம் தேதி) அன்று இரவு 10:00 மணியளவில் நடந்தது. அன்று தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியை காண வேண்டி ஹன்மந்த்வாடி கிராமத்தில் உள்ள ஒருவரது வீட்டில் பலரும் கூடி இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகர்களான பல்வந்த் மகாதேவ் ஜான்ஜ்கே (வயது 50), சாகர் சதாசிவ் ஜான்ஜ்கே (வயது 35) ஆகியோரும் அங்கே போட்டியை பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 277 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே இது தான் மிக அதிக ஸ்கோர் ஆகும்.
அவ்வளவு பெரிய இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணியால் எட்ட முடியாது என்பதால் பல்வந்த் மகாதேவ் மற்றும் சாகர் சதாசிவ் கோபத்தில் இருந்துள்ளனர். அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் செய்த போது ரோஹித் சர்மா ஆட்டமிழந்து சென்றார். அப்போது சிஎஸ்கே ரசிகரான பந்தோபந்த் பாபுசோ திபிலே அங்கே போட்டியை காண வந்திருக்கிறார்.
அவர் சன்ரைசர்ஸ் அணி எடுத்த ஸ்கோர் மற்றும் ரோஹித் சர்மா அவுட் ஆனதை பார்த்து, "ரோஹித் சர்மா போய்விட்டார். இனி மும்பை எப்படி ஜெயிக்கும்?" எனக் கூறி இருக்கிறார். பின்னர் அவர் சிஎஸ்கே அணியை பாராட்டி பேசி இருக்கிறார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ரோஹித் ரசிகர்களான பல்வந்த் மகாதேவ் மற்றும் சாகர் சதாசிவ் அவரது தலையில் கட்டையால் அடித்தனர்.
அதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்ட ரோஹித் சர்மா ரசிகர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்தது. இதனிடையே சிகிச்சை பலனின்றி பந்தோபந்த் பாபுசோ திபிலே மரணமடைந்தார். இந்த சம்பவம் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. ஐபிஎல் தொடரை ரசிப்பது என்பது மாறி இப்போது "ஐபிஎல் வெறித்தனம்" அதிகரித்து வருவதையே இந்த சம்பவம் சுட்டிக் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications