மும்பை : ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கியதில் அந்த அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கும் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அதிருப்தியில் இருக்கும் ரோஹித் சர்மா, இந்திய டி20 அணியில் ஹர்திக் பாண்டியா இடத்துக்கு அபாயத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ரோஹித் சர்மா இழந்த போதும், இந்திய டி20 அணியின் கேப்டனாக நீடிக்கிறார். அவரது தலைமையில் தான் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. எனவே, கேப்டனாக இந்திய அணியை தேர்வு செய்வதில் ரோஹித் சர்மாவுக்கும் பெரும் பங்கு உள்ளது.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் யார், யாரை தேர்வு செய்யலாம் என்ற கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளராக சரியாக செயல்படாதது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. எனவே ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியில் தேர்வு செய்யலாமா? வேண்டாமா? என்ற விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை என்றால் ரோஹித் சர்மா தன் தனிப்பட்ட வெறுப்பால் அவரை அணியில் இருந்து நீக்கியதாக பேசப்படும். எனவே, முதற்கட்டமாக ஹர்திக் பாண்டியாவிற்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறார் ரோஹித் சர்மா. அதாவது 2024 ஐபிஎல் தொடரில் இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து பந்து வீச வேண்டும். இதில் ஒரு சிக்கல் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஏற்கனவே பலவீனமாக இருக்கிறது. பும்ராவைத் தவிர வேறு எந்த பந்துவீச்சாளரும் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் சரியாக செயல்படவில்லை. ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு மிக மோசமாக உள்ளது. அதிக ரன்களை வாரிக் கொடுத்து வருகிறார். மேலும், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவருக்கு பந்து வீசுவதில் சிரமம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காயம் இல்லை என்றாலும் கூட ஹர்திக் பாண்டியா அனைத்து போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பந்து வீசினால் அது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக மாறும் நிலை உள்ளது. அந்த வகையில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியாவை இக்கட்டான நிலையில் சிக்க வைத்து இருக்கிறார்.