விசாகப்பட்டினம் : ஐபிஎல் வரலாற்றிலேயே கோப்பை வெல்லாமல் பெருமை பேசும் அணி என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான். அந்த அணி ஐபிஎல் கோப்பை வெல்லாத போதும் தாங்கள் தான் ஐபிஎல் தொடரில் மிக அதிக ஸ்கோர் அடித்த அணி என கடந்த 10 ஆண்டுகளாக பெருமை பேசி வந்தது.
2013இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 263 ரன்கள் குவித்து இருந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அந்தப் போட்டி நடைபெற்றது. அது சிறிய மைதானம் என்பதோடு கிறிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற அதிரடி பேட்டிங் ஜாம்பவான்கள் அப்போது உச்சகட்ட ஃபார்மில் இருந்த நேரம்.

அந்தப் போட்டியில் கிறிஸ் கெயில் 66 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இருந்தார். டிவில்லியர்ஸ் 8 பந்துகளில் 31 ரன்கள் குவித்து இருந்தார். பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த சாதனை முழுவதும் கிறிஸ் கெயில் என்ற ஒற்றோ மனிதரால் நிகழ்ந்தது. பின்னர் அந்த கிறிஸ் கெயிலையும் அணியை விட்டு நீக்கியது பெங்களூரு அணி. ஆனால், அந்த அணியின் ரசிகர்கள் 2024 ஐபிஎல் வரை பெங்களூரு அணி கோப்பை வெல்லாத போதும் ஒரே போட்டியில் அதிக ஸ்கோர் அடித்த அணி என்ற சாதனையை செய்துள்ளதாக கூறி வந்தனர்.
அதற்கு 2024 ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகள் முடிவுரை எழுதி உள்ளன. சில நாட்கள் முன்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக ஸ்கோர் அடித்த அணி என்ற சாதனையை செய்தது. அப்போது கூட பெங்களூரு அணி ரசிகர்கள் தாங்கள் இரண்டாவது இடத்தில் இருப்பதாக கூறி வந்தனர்.
ஆனால், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 273 ரன்கள் குவித்து இருக்கிறது. இதை அடுத்து பெங்களூரு அணியின் 11 ஆண்டு சாதனை மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அந்த அணியின் ஒரே ஒரு ஐபிஎல் சாதனைக்கும் முடிவு கட்டி உள்ளன ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா. இதை வைத்து அந்த அணியின் ரசிகர்களை மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர் பிற அணிகளின் ரசிகர்கள்.