ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் ரஷீத் கான் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றிபெற வைத்துள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய ரியான் பராக் 48 பந்துகளில் 76 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 68 ரன்களையும் விளாசினர். இதன்பின் குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் - சுப்மன் கில் தொடக்கம் கொடுத்தது.

இவர்கள் இருவரும் முதல் 5 ஓவர்களில் நிதானம் காட்டிய நிலையில், 6வது ஓவரில் சுப்மன் கில் அதிரடியாக 14 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன்பின் சாய் சுதர்சனும் அதிரடியாக சில பவுண்டரிகளை அடிக்க, ஆட்டத்தில் குஜராத் அணியின் கைகள் ஓங்கியது. இந்த நிலையில் குல்தீப் சென் பவுலிங் சாய் சுதர்சன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்பின் 10வது ஓவரின் போது மழை குறுக்கிட, ஆட்டம் சில நிமிடங்கள் தடைபட்டது. இதன்பின் 11வது ஓவரை வீசிய குல்தீப் சென் பவுலிங்கில் மேத்யூ வேட் 4 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அபினவ் மனோகர் அதே ஓவரின் 4வது பந்தில் போல்டாகி வெளியேறினார். இதனால் சுப்மன் கில் மீதான பொறுப்பு அதிகரித்தது. அதற்கேற்ப சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 35 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஆனால் மறுமுனையில் நின்ற விஜய் சங்கர் 16 ரன்களில் வெளியேறினார்.
இதனால் 15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் சேர்த்திருந்தது. தொடர்ந்து 16வது ஓவரை வீச சாஹல் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் 2 பந்திலும் சுப்மன் கில் பவுண்டரி விளாச, 3வது பந்தை கொஞ்சம் ஒய்டாக சாஹல் வீசினார். அதனை இறங்கி அடிக்க முயன்று சுப்மன் கில் 72 ரன்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் கைகள் ஓங்கியது. இதன் பின் ராகுல் டிவாட்டியா - ஷாரூக் கான் இருவரும் இணைந்தனர்.
தொடர்ந்து அஸ்வின் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 17 ரன்கள் சேர்க்கப்பட, குஜராத் அணி வெற்றிக்கு 18 பந்துகளில் 42 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் ஆவேஷ் கான் வீசிய 18வது ஓவரில் ஷாரூக் கான் 14 ரன்களில் ஆட்டமிழக்க, ரஷீத் கான் களம் புகுந்தார். இதனால் ஆட்டம் பரபரப்பாகியது. கடைசி 12 பந்துகளில் குஜராத் அணி வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. குல்தீப் சென் வீசிய 19வது ஓவரில் 2 ஒய்டு, ஒரு நோ-பால், 4 பவுண்டரி உட்பட 20 ரன்கள் விளாசப்பட்டது.
இதனால் கடைசி ஓவரில் குஜராத் அணி வெற்றிக்கு 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீச ராஜஸ்தான் அணியின் ஆவேஷ் கான் அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே ரஷீத் கான் பவுண்டரி அடிக்க, 2வது பந்தில் 2 ரன்களும், 3வது பந்தில் பவுண்டரியும் அடிக்கப்பட்டது. தொடர்ந்து 4வது பந்தில் ஒரு ரன் அடிக்கப்பட, 5வது பந்தில் ராகுல் டிவாட்டியா 3வது ரன் எடுக்கும் போது ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் ஒரு பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது. கடைசி பந்தை எதிர்கொண்ட ரஷீத் கான், பவுண்டரி விளாசி அணியை வெற்றிபெற வைத்தார். இதனால் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.