ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 3 ஆயிரம் ரன்களை விளாசிய இளம் வீரர் என்ற புதிய சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் சேர்த்துள்ளது. சிறப்பாக விளையாடிய ரியான் பராக் 48 பந்துகளில் 5 சிக்ஸ், 3 ஃபோர்ஸ் உட்பட 76 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 2 சிக்ஸ், 7 ஃபோர்ஸ் உட்பட 68 ரன்களையும் விளாசியுள்ளார்.

சிறப்பாக பவுலிங் செய்த குஜராத் அணியின் ரஷீத் கான் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன்பின் குஜராத் அணி சார்பாக சாய் சுதர்சன் - சுப்மன் கில் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. சாய் சுதர்சன் நிதானம் காட்டிய நிலையில், ஆவேஷ் கான் பவுலிங்கில் சிக்ஸ் அடித்து சுப்மன் கில் அதிரடியை தொடங்கினார்.
தொடர்ந்து 6வது ஓவரிலும் சிக்ஸ், பவண்டரியை சுப்மன் கில் விளாச, குஜராத் அணியின் ஸ்கோர் பவர் பிளே ஓவர்கள் முடிவில் 44 ரன்களை சேர்த்திருந்தது. இந்த போட்டியில் சுப்மன் கில் 27 ரன்களை கடந்த போது, புதிய மைல்கல்லை எட்டினார். ஐபிஎல் தொடரில் 3 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல் கேஎல் ராகுலுக்கு பின் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
கேஎல் ராகுல் 80 இன்னிங்ஸ்களில் 3 ஆயிரம் ரன்களை சேர்த்த நிலையில், சுப்மன் கில் 94 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் 3 ஆயிரம் ரன்களை விளாசிய இளம் வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார். இதுவரை 26 வயது 186 நாட்களில் விராட் கோலி 3 ஆயிரம் ரன்களை சேர்த்ததே சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலியின் சாதனையை சுப்மன் கில் 24 வயது 215 நாட்களில் முறியடித்துள்ளார். இதனால் கிங் விராட் கோலியின் சாதனையை பிரின்ஸ் சுப்மன் கில் முறியடித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.