மும்பை : ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் மட்டுமல்லாமல் அனைத்து வீரர்கள் வெற்றிக்காக போராட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதுவரை ராஜஸ்தான் அணி விளையாடிய 13 போட்டிகளில் 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. முதல் 9 போட்டிகளில் 8 போட்டிகளில் வென்ற ராஜஸ்தான் அணி, அடுத்த 4 போட்டிகளில் தொடர்ந்து 4 போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.

இதனால் குவாலிஃபையர் சுற்றுக்கு பதிலாக எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்பில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடி சாம்பியன் பட்டம் வென்ற வாட்சன், சஞ்சு சாம்சனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
வாட்சன் பேசுகையில், ராஜஸ்தான் அணிக்கு மட்டும் ஒவ்வொரு சீசனிலும் இப்படி தான் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 8 போட்டிகளில் விளையாடிய வரை பார்க்கும் போது, ராஜஸ்தான் அணியை வீழ்த்தினால் கோப்பை நிச்சயம் என்று பேச்சுகள் எழும். ஆனால் அதன்பின் ஒவ்வொரு போட்டியாக ராஜஸ்தான் அணியினர் தோல்வியடைவதை வழக்கமாகி வருகிறார். இதனால் வீரர்களின் நம்பிக்கையையும் சிதைக்கிறது.
என்னை பொறுத்தவரை, ராஜஸ்தான் அணியினர் பிரச்சனையை நினைத்து அதிகமாக கவலைப்படுகிறார்கள். அதுதான் அவர்களுக்கு பிரச்சனையாக மாறியுள்ளது. மீண்டும் அடிப்படைகளை சரியாக செய்து, ஒவ்வொரு வீரரும் ஃபார்முக்கு வர வேண்டும். ராஜஸ்தான் அணியினர் தொடக்கமே இந்த சீசனில் எனக்கு சர்ப்ரைஸாக இருந்தது. நேற்றைய ஆட்டத்தில் ஆவேஷ் கான், ரியான் பராக் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள்.
அதேபோல் கேப்டன் சஞ்சு சாம்சன் ஒவ்வொரு வீரரும் வெற்றிக்காக போராட வேண்டும் என்று தீவிரமாக முயற்சிக்கிறார். மீண்டும் சில நல்ல ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்தி மன உறுதியுடன் இருக்க வேண்டும். ஆனால் ராஜஸ்தான் அணி வெற்றிக்கான பாதையில் பயணிக்காமல், அதற்கு நேர் எதிரான பாதையில் பயணிக்கிறது. இதனால் ராஜஸ்தான் அணியின் ரசிகர்களும் சோகமடைவதை பார்க்க முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.